மேஜர் இராசநாயகம்

பூதத்தம்பி கோணேஸ்வரன் என்ற இளம் மாணவன் தனது பதினைந்தாவது வயதில1991 ம் ஆணடு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தான் .கிளிநொச்சி மாவட்டம் தருமபுரம் இவனுடைய சொந்த ஊர். அடிப்படை பயிற்சியை முடித்துக் கொண்டு இராசநாயகம் என்ற இளம் போராளியாக வன்னி மாவட்ட படையணியில் இணைக்கப்பட்டான். தாக்குதல் அணியில் ஒரு போராளியாக வன்னியிலும் மணலாற்றுக் காடுகளிலும் தனது களச் செயற்பாடுகளைத் துவங்கினான் இராசநாயகம். யாழ்குடா நாட்டின் பல்வேறு களங்களில் திறமுடன் போராடிய இராசநாயகம் விரைவிலேயே இளம் அணித் தலைவனாக வளர்ந்தான். இவனுடைய முன்முயற்சிகள், சூட்டுத்திறன் ,புதிய ஆயுதங்களை கையாளுவதில் இருந்த ஆர்வம் ஆகியவற்றால் கனரக ஆயுதங்களில் பயிற்றுவிக்கப்பட்டு தேர்ந்த சூட்டாளனாக வளர்ந்தான்.

1995 ல் இயக்கம் யாழ்குடா நாட்டிலிருந்து பின்வாங்கிய போது எமது தளபதி ஐயா அவர்களின் பொறுப்பில் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிகளில் உள் நடவடிக்கைகளை மேற்கொள்ள பணிக்கப்பட்ட போது. இராசநாயகம் 15 போராளிகளை கொண்ட ஒரு பிளாட்டூனுக்கு லீடராக பொறுப்பேற்று வெற்றிகரமாக பல தாக்குதல்களை நடத்தினான். இறுக்கமான சூழ்நிலையில் பொறுப்பாளருடன் தொடர புகள் அற்றுப்போன நிலையில் தனது அணியை மிகவும திறமையாக வழிநடத்தி தாக்குதல்களை நடத்தினான். திறமுடன் தனது அணியை எதிரியின் தடைகளூடாக நடத்தி வன்னியை வந்தடைந்தான் .இராசநாயகத்தின் இத் துணிச்சல் மிக்க செயற்பாடுகளை கட்டளைத் தளபதிகள் பால்ராஜ் அவர்களும் தீபன் அவர்களின் வெகுவாக பாராட்டி பெரிதும் அவனை ஊக்கபடுத்தினர்.

1995 ம் ஆணடில் இராசநாயகம் சாள்ஸ் அன்ரனி சிறப்புப படையணி யில் அணித் தலைவனாக இணைக்கப்பட்டான். மீண்டும் வன்னியில் களமிறங்கிய இராசநாயகம், படையணியில் பிளாட்டூன் லீடராகவும் கனரக ஆயுத லீடராகவும் செயற்பட்டான். 1996 ல் ஓயாத அலைகள் – 1 முல்லைத்தீவு மீட்புச் சமரில் கனரக ஆயுத அணி லீடராக திறமுடன் களமாடினான். இச்சமரில் படுகாயமுற்ற இராசநாயகம் சில மாதங்கள் சிகிச்சைக்கு பிறகு மீண்டும் களமுனைக்கு திரும்பினார். 1997 ல் ஜெயசிக்குறு முறியடிப்புச் சமரில் படையணியின் தளபதி சேகர் அவர்களின் கட்டளையில் இராசநாயகம் பல்வேறு கடமைகளில் செயலாற்றினான் .

1998 ம் ஆணடு 2 ம் மாதம் உருத்திரபுரம் பகுதியில எதிரியின் பாரிய முன்னேற்ற முயற்சிகளுக்கு எதிராக முறியடிப்புச் சமரில் இராசநாயகம் கனரக ஆயுதங்களின் ஒருங்கிணைப்பாளராக திறமுடன் செயற்பட்டான். படையணியின் தளபதி ராகவன் அவர்களின் கட்டளையில் கனரக ஆயுதங்களை திறமையாக ஒருங்கிணைத்து தாக்குதல்களை நடத்திய இராசநாயகம், எதிரியின்”டாங்க்”கை தாக்கியழித்ததில் முக்கிய பங்காற்றினார். ஓயாத அலைகள் – 2 கிளிநொச்சி மீட்புச் சமரில் இராசநாயகம் கனரக ஆயுதங்களின் ஒருங்கிணைப்பாளராக தீவிரமான சண்டைகளைச் செய்தார். இவ் வெற்றிச் சமருக்குப் பிறகு ,1999 ல் படையணி ஆனையிறவு பரந்தன் களமுனையில் நிலை கொண்டிருந்த போது இராசநாயகம் கொம்பனி லீடராக சிறப்புத் தளபதி சேகர் அவர்களால் நியமிக்கப்பட்டு தனது செயற்பாடுகளைத் தொடர்ந்தார். படையணியின் புகழ் பூத்த அணித் தலைவனாக விளங்கிய வீரமணி கொம்பனி மேலாளராக கடமையாற்ற ,அவருடன் கொம்பனி லீடராக இராசநாயகம் இணைந்து திறமுடன் செயற்பட்டார். தனது பகுதி முன்னரங்க நிலைகளை வலிமைப் படுத்துவதிலும் பாதுகாப்பதிலும் இராசநாயகம் ஓய்வொழிச்சலின்றி உழைத்தார். இளம் போராளிகள் போர் நுணுக்கங்களை கற்றுக் கொள்ளவும் நல்ல சூட்டாளர்களாக வளரவும் அவர்களுக்கு பயிற்சிகளையும் ஆலோசனைகளையும் வழங்கி ஊக்கபடுத்தினார்.

1999 ல் ராகவன் அவர்கள் படையணியின் சிறப்புத் தளபதியாக பொறுப்பேற்ற போது இராசநாயகம் தொடர்ந்து கொம்பனி லீடராக கடமையாற்றினார். ராகவன் படையணியின் ஒரு பகுதியை சிறப்புப் பயிற்சிகளில் ஈடுபடுத்திய போது இராசநாயகம் குறைந்த எண்ணிக்கையிலான போராளிகளை கொண்டு கொம்படி யிலிருந்து பரந்தன் வரை நீண்ட முன்னரண் வரிசையில பாதுகாப்புக் கடமைகளை திறமுடன் மேற்கொண்டார் .முன்னரங்க பாதுகாப்பில் மோட்டார் ஆதரவுச் சூடுகளை பெற்றுக்கொள்வதில் தேர்ந்த ஓ.பி. போராளியாகவும் இராசநாயகம் செயற்பட்டார்.

சிறப்புப் பயிற்சிகளுக்காக ராகவன் படையணியின் கனரக ஆயுதங்களை தனியாக பிரித்த போது இராசநாயகம் கனரக ஆயுதங்களின் ஒருங்கிணைப்பாளராகவும் கொம்பனி யின் மூன்றாவது லீடராகவும் செயற்பட்டார். பின்னர் தடையுடைப்பு அணியின் கொமாண்டராக நியமிக்கப்பட்ட இராசநாயகம், தனது தடையுடைப்பு அணியை தீவிரமான பயிற்சிகளில் ஈடுபடுத்தி வலிந்த தாக்குதலுக்கு தயார்படுத்தினார் .

மிகு‌ந்த மாந்தநேயமும் போராளி களுடன் சகோதரத்துவ அன்பும் கொண்ட இராசநாயகம் போராளிகளை வழிநடத்துவதில் சிறந்த அணித் தலைவனாக விளங்கினார். இளம் போராளிகளை பயிற்றுவித்ததிலும் அவர்களை அணித் தலைவர்களாக உருவாக்குவதிலும் இராசநாயகம் பெரும் பங்காற்றினார். போராளிகளின் வேலைப் பளுவைப் பகிர்ந்து கொண்டு அவர்களுடன் இணைந்து வேலைகளை செய்து அவர்களை ஊக்கபடுத்தினர். ஆயுதங்களையும் வெடிகளையும் துப்புரவாக பராமரிப்பதில் போராளிகளுக்கு முன்னோடியாக விளங்கினார். இராசநாயகத்தால் உருவாக்கப்பட்ட பல அணித் தலைவர்கள் பின்னாட்களில் பல களங்களில் திறமுடன் செயலாற்றினா. தனது துணிச்சலான, திறமையான செயற்பாடுகளால் தேசியத் தலைவரிடமும் தளபதிகளிடமும் பலமுறை பாராட்டுகளைப் பெற்ற போராளியாக இராசநாயகம் திகழ்ந்தார்.

ஓயாத அலைகள் – 3 நடவடிக்கையில் அம்பகாமம் பகுதியில் களமிறங்கிய இராசநாயகம் திறமுடன் களமாடினார். தனது அணியை சிறப்பாக தாக்குதலில் ஈடுபடுத்திய இராசநாயகம் 04-11-1999 அன்று கறிப்பட்டமுறிப்பில் தம்மால் மீட்கப் பட்ட பகுதிகளை எதிரி மீணடும் கைப்பற்றும் நோக்கில்”டாங்க்”தாக்குதலை நடத்திக் கொண்டு முன்னேறிய போது இராசநாயகம் தனி அணியாக நின்று எதிரியின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்திய வீரச் சமரில் இராசநாயகம் வீரச்சாவைத தழுவிக் கொண்டார். இராசநாயகத்தின் துணிவும் விடாமுயற்சியும் தியாகமும் தொடர்ந்த சண்டையில் எமக்கு பெரும் வெற்றிகளை ஈட்டித் தந்தன.

இளம் வயதிலேயே தமிழ் மக்களின் விடுதலைக்காக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து போராடிய இராசநாயகம் கடமையுணர்வும் விடுதலைப் பற்றும் துணிவும் மிக்க போராளியாக இறுதிவரை போராடினார் .பல்வேறு நெருக்கடியான சூழல்களில் துணிச்சலாக சவால்களை எதிர் கொண்டு வென்ற ஒரு அணித் தலைவனாக இராசநாயகம் திகழ்ந்தார். தேசியத் தலைவர் மீதும் எமது மக்கள் மீதும் ஆழ்ந்த பற்று கொண்ட மேஜர் இராசநாயகம் அவர்களின் ஈடிணையற்ற துணிவும் விடாமுயற்சியும் கடமையுணர்வும் எமது மக்களுக்கு என்றும் வழிகாட்டலாக அமையும்.

இதே களத்தில் வீரச்சாவைத தழுவிக் கொண்ட எமது படையணியின் அணித் தலைவர்கள் கப்டன் ஜீவராசா , கப்டன் இளையவன், கப்டன் பாவண்ணன் , கப்டன் வேங்கையரசன் ,லெப். செல்வதேவன் , லெப். கீரன்/கரன்,லெப். இருதயன் , லெப். நல்கீரன் , லெப். மலரவன், லெப். தமிழ்ப்பிரியன் ,லெப். ஆரூரான் , 2 ம் லெப். வல்லவன், 2 ம் லெப். சுபாசன் , 2 ம் லெப். திருக்குமரன், முதலான அனைத்து மாவீரர்களையும் நினைவு கூர்ந்து வீரவணக்கம் செலுத்துகின்றோம்.

நினைவுப்பகிர்வு-பெ.தமிழின்பன்

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”