மேலும் 4 ஆவா குழு சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!
ஆவா குழுவுடன் இணைந்து வடக்கில் குழப்ப நிலையை ஏற்படுத்த முயன்றார்கள் என்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட மேலும் நான்கு சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று இவர்கள் முன்னிறுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இந்த நான்கு இளைஞர்களையும், பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல்துறையினர் கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில், நேற்று முன்னிறுத்தினர். இவர்களை எதிர்வரும் 16ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதிவான் அருணி ஆட்டிக்கல உத்தரவிட்டார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நான்கு சந்தேக நபர்களில் இருவர், கபொத உயர்தர வகுப்பு மாணவர்களாவர்.
இவர்கள் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுடன் இணைந்து அண்மையில் வடக்கு மாகாணத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டார்கள் என்று பயங்கரவாத தடுப்பு காவல்துறையினர் தெரிவித்தனர். தமது விசாரணைகள் இன்னமும் முடிவடையாததால் இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறும், பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல்துறையினர் நீதிவானிடம் கோரியிருந்தனர். ஏற்கனவே, ஆவா குழுவுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட ஆறு பேர், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்துடன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.