48

யார் உண்மையான போராளிகள்?

ஈழ விடுதலை வரலாற்றில் உன்னதமான ஒரு விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி விமர்சிக்க ஒரு படை சில வல்லரசுகளின் உந்துதலில் புறப்பட்டு இருக்கின்றது. இவர்கள் நோக்கம் அன்றைய போராட்டங்களை தூற்றி எழுதுவது மட்டுமல்ல இனி வரும் போராட்டத்தை முடக்குவதுமே. எழுதுபவை எல்லாமே எழுச்சியின் எழுத்துக்களாவதில்லை. விரும்பியோ விரும்பாமலோ துரோகங்களையும் எழுதியே செல்கின்றது எங்கள் இனத்தின் விடுதலை வரலாறு.

தமக்கென ஒரு இலக்கு வகுத்து அந்த இலக்கில் உண்மையாக போராடும் பாதையை தெரிவு செய்து அதை மாசுபடுத்தாமல் விட்டுக் கொடுக்காமல் எதிரிகளிடம் விலை போகாமல் எக்காலத்திலும் உறுதி குன்றாமல் போராடி தெரிந்தெடுத்த பாதையில் வெற்றியோடு பயணித்த நாட்களில் மட்டுமன்றி அந்த பாதை தோல்வியை சந்தித்த பின்னாலும் அதை குறை கூறாமல் அந்த பாதையின் நெளிவு சுளிவுகளை நேர்படுத்தும் உள்ளக செப்பனிடல்களை சக போராளிகளோடு இணைந்து உரிமையோடு நேர் நின்று செதுக்கி அந்நிய சக்திகளுக்கு அதை விட்டு கொடுக்காமல் மகத்துவப்படுத்தி மக்களுக்கு விடுதலையை வென்றெடுத்து கொடுக்கும் வரை போராட்டங்களை முடக்காமல் தன் நெஞ்சு பொய்க்காமல் போராடுபவனே உண்மையான போராளி.

இன்று முன்னாள் போராளிகள் என கூறிக் கொண்டு அந்நாளில் மக்கள் முன் தம்மை பெருமையாக பேசி விட்டு இன்று தோல்வியை சந்திக்க திராணியின்றி போராட்டத்தை கை விட்டு வந்து காட்டி கொடுப்பதும் குற்றம் குறை சொல்வதும் எதிரி வாய்க்கு அவல் போடும் வகையில் அதிமேதாவித்தனத்தை நூல்கள் என்ற பெயரில் எழுதிக் கிழிப்பதும் உண்மையான போராளிகள் செய்யும் செயல்கள் அல்ல. என் தாய் தவறு என்றால் தாயிடம் நேரில் சொல்லி திருத்த வேண்டும். தாயை அந்நியனுக்கு விலை பேசி விற்பவர்கள் உண்மையான போராளிகளே அல்லர்.

உண்மை என நம்பிய தமது தலைவனின் போராட்டத்திற்கு வலு சேர்த்து இறுதி வரை போராடிய மக்கள் இவர்களை விட எவ்வளவோ மேல். போராட்டம் தவறு தலைமை தவறு என இவர்கள் போராட்டம் வீச்சு பெற்ற காலத்தில் சொல்லி இருந்தால் இவர்களை மன்னித்து இருக்கலாம். அன்று அவர்கள் விலகி சென்று நூல் எழுதி இருந்தால் அது அவர்கள் கருத்து விமர்சனம் என கூறலாம். எழுச்சியான போராட்டம் வீழ்ச்சி அடைந்த பின் எதிரிகளோடு கூடி விமர்சிக்கும் இரண்டகங்கள் நேரற்ற செயல் மட்டுமல்ல. துரோகத்தின் செயலுமாகும்.

தவறுகள் இல்லாமல் உலகில் எந்த விடுதலைப் போராட்டமும் இல்லை. ஆனால் உலக விடுதலை வரலாற்றில் எங்கும் இல்லாதவாறு எமது போர்க்கால இலக்கியங்கள் என்ற பெயரில் இப்பொழுது படை எடுத்து வரும் நூல்கள் பல எமது உன்னதமான போராளிகளின் ஈகத்தை கொச்சை படுத்தி எமது இலக்கு தவறாத விடுதலைப் போராட்டத்தை களங்கப்படுத்தி முடக்கும் இலக்கியங்களாக வெளிவருகின்றமை கொடிய துன்பியல் நிகழ்வுகளாகும்.

உலக போராட்ட இலக்கியங்கள் யாவுமே போராட்டத்தின் உன்னதத்தை எடுத்து சொல்லும் பொழுது உலகுக்கே வியப்பையும் மதிப்பையும் கொடுத்த விடுதலைப் புலிகளின் போராட்டத்தை சில முன்னாள் போராளிகள் என்பவர்கள் நிகழ்ந்த தவறுகள் என்ற பெயரில் சில வல்லரசுகளின் உந்துதலின் பெயரில் கொச்சைப்படுத்தி அவதூறாக எழுதுகின்றார்கள். இதை மக்கள் விழிப்புணர்வோடு எச்சரிக்கையாக பார்க்க வேண்டும் என்பதோடு குப்பைகள் என தூக்கி எறியவும் முன்வர வேண்டும்.

யாரும் எவரையும் விமர்சிக்கலாம். இவர்கள் வெளியில் இருந்தவர்கள் என்றால் வெளியே இருந்து விமர்சிக்கலாம். உள்ளே இருந்து விட்டு அங்கு விமர்சித்து திருத்தி இருக்கலாம். இடர் காலங்களில் தங்கள் இருப்பை இடம் மாற்றி கொள்வதோடு காறி உமிழும் செயல் இழிவானது. ஆனால் உண்மையான விடுதலையை நேசிக்கும் மக்கள் அவர்களையும் அவர்கள் எத்துணை தரமாக எழுதினாலும் அந்த எழுத்துக்களையும் மதிக்கப் போவதில்லை. இவர்கள் முன்னாள் போராளிகள் ஆகலாம். ஆனால் இன்றும் கொண்ட கொள்கையையும் தாம் பணியாற்றிய விடுதலை இயக்கத்தையும் போற்றி அதற்காக வலி சுமக்கும் போராளிகள் மட்டுமே உண்மையான போராளிகள்.

அதே போல் மண்ணின் விடுதலைக்காக இறுதி மூச்சு வரை தாம் தெரிவு செய்த பாதையில் உன்னதமான இலட்சியத்திற்காக உண்மையாக போராடி வீரச்சாவு எய்தியவர்கள் மட்டுமே உண்மையான போராளிகள். தவறுகள் பேசப்பட வேண்டும். ஆனால் ஒரு குடும்பத்தின் தவறுகள் குடும்பத்திற்குள் பேசப்பட வேண்டும்.அம்பலத்தில் தமது குடும்பத்தை அசிங்கப்படுத்தி பேசுபவர்கள் அந்த குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருக்க மாட்டார்கள். மாறாக எதிரியின் அங்கீகாரத்திற்கான உழைப்பே அதுவாகும். இவை வரலாற்றில் நிலைக்கப் போவதில்லை. ஒரு சிலரின் காழ்ப்புணர்வு பசிக்கு வேண்டுமானால் இவர்கள் எழுத்துக்கள் விருந்தாகலாம். எதிரிக்கு கருவியாகலாம். ஆனால் உன்னத தியாகங்களை புரிந்து உயிர் கொடுத்து கண்ணீராலும் செந்நீராலும் வளர்த்தெடுத்த விடுதலைப் பயிரை இவை கருக்கி விட முடியாது .

தம் தாயை விபச்சாரிகள் என எழுதுபவர்கள் போல், தான் பெற்ற சேய்களை கொல்ல வெறி கொண்டு அலைபவர்கள் போல் அலையும் இந்த முன்னாள் போராளிகளின் சாட்சிய எழுத்துக்கள் வரலாற்றில் அழுக்குகளே. அகற்ற வேண்டிய குப்பைகள் பற்றி மக்கள் கவலைப்பட போவதில்லை. உயிரோடு இல்லாது போனாலும் எம் மண்ணுக்காக உயிர் கொடுத்து வரலாற்றை எழுதிய ஒவ்வொரு போராளியும் ஒவ்வொரு விடுதலை இலக்கியமாக மக்கள் மனங்களில் வாழ்கின்றனர். அவர்கள் போதும் இந்த போராட்டம் தோற்றுப் போகாமல் மண்ணை மீட்க்கும் வரை மக்களை போராட வைப்பது உறுதி!

முன்னாள் போராளிகள் எனக் கூறி விட்டு போராட்டத்தை களங்கப்படுத்தி விமர்சிக்கும் இரண்டகர்களை விட இந்நாளிலும் தேசியத் தலைமையையும் போராடும் போராளிகளையும் போற்றி மண்ணின் விடுதலைக்காக விட்டு கொடுப்பு இன்றி போராடும் மக்கள் மேலானவர்கள்! அவர்களே விடுதலை வரலாற்றை இன்றும் எழுதிக் கொண்டு இருப்பவர்கள்!

(எங்கள் ஈழம் இது தமிழீழம்)

(www.eelamalar.com)