ராஜபக்ஷவை தூக்கிலிடவேண்டும் – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி!

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷவை தூக்கிலிடவேண்டுமென்பதே எமது நிலைப்பாடு என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் தொடர்பாக யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற செய்தியாளர்சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், தமிழர்களினுடைய வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த மைத்திரிபால சிறிசேன, வடக்குக் கிழக்கு இணைப்பில்லை, பௌத்தத்திற்கே முன்னுரிமை என மிரட்டிக்கொண்டிருக்கின்றார்.

மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் மகிந்த ராஜபக்ஷவை விழுத்தி மைத்திரிபால சிறிசேனவை ஆட்சிக்கு கொண்டுவந்தால் தான் சர்வதேச விசாரணை நடத்தமுடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்குறுதியளித்தது.

ஆனால், ராஜபக்ஷவை முழுமையாகப் பாதுகாத்துக்கொண்டு, தமிழ் மக்கள் மீது இன அழிப்பை மேற்கொண்ட ராஜபக்ஷ எனும் பேயை பாதுகாத்துக்கொண்டு, தான் இல்லாவிட்டால் பேய் ஆட்சிக்கு வந்துவிடும் என மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார்.

தனக்கு கறுப்புக் கொடி காட்டினால் பேய்கள் ஆட்சிக்கு வந்துவிடும். மகிந்த ஆட்சிக்கு வந்துவிடுவார். பேய்கள் பலம் பெறும் எனக் கூறும் கதைகள் அனைத்தும் தமிழர்களை முட்டாள்களாக்கும் செயல்களே.

உண்மையிலேயே ராஜபக்ஷ மீண்டும் பதவிக்கு வரக்கூடாது என விரும்புபவர்களாக இருந்தால் அவரைத் தூக்கில் போடுவதே ஒரே வழி எனத் தெரிவித்துள்ளார்.