60

புலிகள் அமைப்பில் இருந்த இந்திய உளவாளி! ‘தான் கொல்லப்படுவோம்’ என்பது தெரியுமாம்! சர்ச்சை கிளப்பும் புத்தகம்!

ராஜிவ் காந்தி கொலை… இந்தச் சம்பவம் நடந்து 25 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் அதற்கான சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. இன்னமும் மர்மம் விலகாத தொடர்கதையாகவே இருக்கிறது.

குற்றம் விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுவிட்டபோதிலும் இன்னமும் அந்தச் சம்பவம் குறித்துவரும் தகவல்கள் அதற்கான சூடு குறையாமல் இருக்கின்றன. குற்றம், விசாரணை, தண்டனை, மேல் முறையீடு என ஒருபக்கம் இருந்தாலும், மறுபக்கம் ராஜிவ் கொலை குறித்து ஏகப்பட்ட புத்தகங்கள் வந்துவிட்டன. அவற்றில் சொல்லப்பட்டிருக்கும் சம்பவங்கள், விஷயங்கள் எழுப்பும் சந்தேகங்களுக்குப் பதில் சொல்லத்தான் யாரும் இல்லை.

‘ராஜீவ் காந்தி கொலை- ஓர் உள்வேலையா?’
இரண்டு வருடங்களுக்கு முன்பு ஊடகவியலாளர் பெரோஸ் அகமது எழுதிய, ‘ராஜீவ் காந்தி கொலை- ஓர் உள்வேலையா?’ என்கிற புத்தகத்தில், ராஜிவ் காந்தி கொலையால் புலிகளுக்கு எந்த ஓர் ஆதாயமும் இல்லை. அது, ஓர் அரசியல் ஒப்பந்தக் கொலை. சி.பி.ஐ தாக்கல் செய்த அறிக்கையில், ‘விடுதலைப்புலிகள் இயக்கத்தை ராஜிவ் காந்தி ஆட்சிக்கு வந்தால் அழித்துவிடுவார்’ என்பதற்காகவே கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருப்பது முற்றிலும் பொய். ராஜிவ் மரணத்தால் ஆதாயம் பெற்றிருக்கக் கூடியவராக இருப்பவர்களால்தான் இந்தக் கொலை நடந்திருக்கும் என்று தெரிவித்திருந்த கருத்து, மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

‘தான் கொல்லப்படுவோம்’ என்பதை அறிந்திருந்த ராஜிவ்!

இந்தநிலையில், சமீபத்தில் வெளியாகி இருக்கும், ‘ராஜிவ் காந்தியின் படுகொலை’ புத்தகத்தை எழுதிய நீனா கோபால் என்கிற பத்திரிகையாளர் தனது புத்தகத்தில் தெரிவித்திருக்கும் கருத்துகள் மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட நாளான மே 21, 1991 அன்று, அவரைப் பேட்டி எடுப்பதற்காக ஸ்ரீபெரும்புதூர் மைதானம் வரை அவருடனே பயணித்தவர் நீனா. ‘தான் கொல்லப்படுவோம் என்பது ராஜிவ் காந்திக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தது’ என்கிற விஷயத்தைத் தனது புத்தகத்தில் அம்பலப்படுத்தி இருக்கிறார் நீனா. அந்த மைதானத்தில் பாதுகாப்புக் குறைபாடுகள் இருந்ததையும் அழுத்தமாகக் குறிப்பிட்டு இருக்கிறார்.

அவரது புத்தகத்தில், ”நாங்கள் மைதானத்தை நெருங்கும் சமயத்தில் என்னுடைய கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்துக்கொண்டிருந்த ராஜிவ், ‘இதைக் கவனித்தீர்களா? ஒவ்வொரு முறையும் தெற்காசிய நாடுகளில் இருந்து ஒரு தலைவர் உருவாகும்போதோ அல்லது தனது மக்களுக்காகவோ, தனது நாட்டுக்காகவோ ஏதாவது ஒன்றைச் சாதிக்கும்போது அவர் தாக்கப்படவோ, கொல்லப்படவோ செய்கிறார். உதாரணமாக இந்திரா காந்தி, ஷேக் முஜிப், பூட்டோ, ஜியா உல் ஹக், பண்டாரநாயக என இந்த எண்ணிக்கை தொடர்கிறது. இதில், நானும் சில தீயசக்திகளின் இலக்காக இருக்கலாம்’ என்று சொல்லி இருக்கிறார். இதைச் சொன்ன சில மணி நேரங்களிலேயே அவர் கொல்லப்பட்டிருக்கிறார்’’ என்பதைப் பதிவுசெய்ததோடு மற்றொரு விஷயத்தையும் சொல்லி இருக்கிறார்.

மாத்தையா – புலிகள் அமைப்பில் இருந்த இந்திய உளவாளி!

அது புலிகளின் அடுத்தகட்ட தலைவராக விளங்கிய மாத்தையா இந்திய உளவு அமைப்போடு தொடர்புடையவர் என்று சொல்லி, அவரை கைதுசெய்து தூக்கிலிட்டது விடுதலைப்புலிகள் அமைப்பு. அது உண்மை என்பதையும் விளக்கி இருக்கிறார் நீனா. ‘’விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்த மாத்தையா 1987-ம் ஆண்டில் அதன் இணைத் தலைவராக உயர்ந்தார். பிரபாகரனுக்கு அடுத்தபடியாக இருந்த நேரத்தில் அவருக்கு, இந்திய உளவு அமைப்பான ராவோடு தொடர்பு ஏற்பட்டது. அதன்படி, விடுதலைப்புலிகள் பற்றிய ரகசியத் தகவல்களை அந்த அமைப்போடு பரிமாறிக்கொண்டார்.

விடுதலைப்புலிகள் உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்ற பின்பு, அந்த இயக்கத்தின் தலைவரான பிரபாகரனை அழித்து, தக்க சமயத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைமைப் பொறுப்பேற்க வேண்டும் என்பதே மாத்தையாவுக்கு, ரா அமைப்பு கொடுத்திருந்த முக்கியமான பணி. அதற்கான எல்லா ஆதரவையும் செய்தது. இந்தச் சமயத்தில், அமிர்தலிங்கம், மகேஸ்வரன் ஆகியோர் மர்மமான முறையில் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். அப்போது மாத்தையா மீது பொட்டு அம்மானுக்கு சந்தேகம் வந்ததால் அவரது தகவல் பரிமாற்றம் அனைத்தும் ஒட்டுக் கேட்கப்பட்டது.

அதில் அவருக்கும், இந்திய உளவு அமைப்புக்குமான தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டதால், அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டது. தான் இரண்டாம்கட்ட தலைவராக இருந்த காலத்தில் இலங்கை மற்றும் இந்தியாவின் பல்வேறு அதிகார வட்டத்தில் இருப்பவர்களோடு பழகும் வாய்ப்புக் கிடைத்தபோது மாத்தையாவுக்குள் இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதன்பின்பு மாத்தையா கைது செய்யப்பட்டு 19 மாதங்களுக்கும் மேலாகத் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு, கொடூரமான அளவு துன்புறுத்தப்பட்டார். அதன் பின்னரே தூக்கிலிடப்பட்டார். அதோடு, மாத்தையாவின் ஆதரவாளர்களாக இருந்த 257 பேரையும் கொன்று குவித்ததோடு மட்டுமில்லாமல், குழிதோண்டி தீயிட்டுத் தங்களது வழக்கமான பாணியில் விடுதலைப்புலிகள் கொலை செய்தார்கள்’’ என்று புத்தகத்தில் தெரிவித்துள்ளார் நீனா.

உளவு அதிகாரியின் ஒப்புதல் வாக்குமூலம்!

இதில் பேசி இருக்கும் முன்னாள் உளவு அதிகாரி ஒருவர், ‘’1987 முதல் 1990 காலகட்டத்தில் இலங்கையில் இந்திய ராணுவம் முகாமிட்டிருந்த சமயத்தில், விடுதலைப்புலிகள் இயக்கத்தினுள் அவர்கள் ஊடுருவினார்கள். இது முழுக்க நமது தவறுதான். நாம் பிரபாகரனைத் தவறாக மதிப்பிட்டுவிட்டோம். இந்த விஷயம் இவ்வளவு தவறாகப் போகும் என்று நாங்கள் நினைக்கவில்லை. பிரபாகரன் மனவோட்டத்தை அறிந்திருந்தால் நாம் ராஜிவ் காந்தி மரணத்தைத் தடுத்திருக்க முடியும்’’ என்று தெரிவித்திருக்கிறார். இப்படிப் பல சர்ச்சைக் கருத்துகளைத் தாங்கி வெளிவந்திருக்கிறது அந்தப் புத்தகம். இன்னும் எத்தனை விஷயங்கள் இதில் இருக்கிறதோ தெரியவில்லை?!

யார் இந்த நீனா?

37 ஆண்டுகளாக ஊடகவியலாளராகப் பணிபுரிந்து வருபவர் நீனா கோபால். 1980-களில் ஐக்கிய அரபு நாடுகளில் பணிபுரிந்தவர். 1990-களில் ஏற்பட்ட முதல் வளைகுடா போரில் செய்தியாளராகப் பணியாற்றினார். போரினால் பாதிக்கப்பட்ட ஈராக் மற்றும் அதன் அண்டை நாடுகளில் இரண்டாம் வளைகுடா போரின்போது பணியாற்றினார். அதன்பின் இந்தியா வந்த அவர் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவுத் துறை குறித்த செய்திகளைச் சேகரிப்பதில் ஆர்வம் மிக்கவராக இருந்தார். தற்போது பெங்களூரூவில் ‘டெக்கான் கிரானிக்கல்’ பத்திரிகையின் ஆசிரியராகப் பணிபுரிகிறார்.

நன்றி : விகடன்