லெப்.கேணல். குமரப்பா உட்பட 12 வேங்கைகளின் வீரமரணமே ராஜீவ்காந்தி படுகொலையின் முதல் விதை!

இந்திய முன்னாள் இராணுவ வீரரும், இந்திய அமைதிகாக்கும் படை அதிகாரியாக இலங்கையில் பணியாற்றியவரும் இன்னாள் ஊடகவியலாளருமான சுஷாந்த் சிங், ‘மிஷன் ஓவர்சீஸ்: டெயாரிங் ஒப்பரேஷன்ஸ் பை த இந்தியன் மிலிட்டரி’ என்ற பெயரில் நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தியாவுக்கு வெளியே – பிற நாடுகளில் – இந்திய இராணுவம் நடத்திய இராணுவ நடவடிக்கைகள் குறித்த மிக முக்கிய சம்பவங்களின் தொகுப்பாக இந்த நூல் வெளிவந்திருக்கிறது.

இந்நூலில், 1988ஆம் ஆண்டு மாலைதீவில் இந்திய இராணுவம் சார்பாக நடத்தப்பட்ட ‘காக்டஸ்’ இராணுவ நடவடிக்கை, 2000ஆம் ஆண்டு சியரா லியோனில் நடத்திய ‘குர்கி’ இராணுவ நடவடிக்கை என்பவற்றுடன், 1987ஆம் ஆண்டு இலங்கையில் ‘பவன்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட இராணுவ நடவடிக்கை குறித்தும் பல புதிய தகவல்களை சுஷாந்த் சிங் இந்நூலில் வெளியிட்டுள்ளார்.

அதில், விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் குமரப்பா, புலேந்திரன் உட்பட பதின்மூன்று வீரர்கள் சயனைட் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

“1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி காலை பத்து மணியளவில் மேஜர் ஷெனன் சிங்கின் படையணிக்கு இலங்கை இராணுவத்தின் 54வது படையணியில் இருந்து ஒரு தகவல் வந்திருந்தது. அதில், இந்திய அமைதிகாக்கும் படையினர் வசமிருந்த விடுதலைப்புலி உறுப்பினர்கள் பதின்மூவரையும் நீதிமன்ற விசாரணைக்காக அன்று மாலை நான்கு மணிக்கு தம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், பதின்மூவரும் சிறைவைக்கப்பட்டிருந்த பலாலி உணவகத்தின் பாதுகாப்பை முழுமையாக இலங்கை இராணுவம் வசம் ஒப்படைத்துவிட்டு அங்கிருந்து அவர்கள் நீங்கிச் செல்ல வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

“இது மேஜர் ஷெனன் சிங்குக்கு கடும் அதிருப்தியைத் தந்திருந்தது. ஏனெனில், ஏற்கனவே பிடித்துவைக்கப்பட்ட பதின்மூன்று போராளிகளுக்கும் மன்னிப்பு வழங்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், மீண்டும் அவர்களை விசாரிப்பது முறையல்ல என்று அவர் கருதினார். மேலும், அவர்கள் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டால் அங்கு சித்திரவதைக்கு உள்ளாக்கப்படலாம் என்று புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன், இலங்கையின் அழுத்தங்களுக்கு இந்திய இராணுவம் செவிசாய்க்காது என்றும் புலிகள் நம்பியிருந்தனர்.

“தமக்குக் கிடைத்த தகவலை டெல்லி வட்டாரத்துக்குத் தெரியப்படுத்திய ஷெனன் சிங், போராளிகளை இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கக் கூடாது என்றும், அப்படி ஒப்படைத்தால், இந்திய இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான நல்லெண்ண உறவு கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் விளக்கியிருந்தார். எனினும் டெல்லியில் இருந்து அவருக்கு சாதகமான பதில் கிடைக்காததால், போராளிகளை இலங்கை இராணுவம் வசம் ஒப்படைக்க ஷெனான் சிங் வேண்டா வெறுப்பாக ஒப்புக்கொண்டார்.

“இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த போராளி குமரப்பா, “ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? நாம் இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டால் அதுவே எமது கடைசி நாளாக அமைந்துவிடும் என்று எமது தலைவர்கள் கூறியிருக்கிறார்கள்” என்று ஷெனான் சிங்கிடம் கூறினார். இந்த வார்த்தைகளின் மறைபொருளைப் புரிந்துகொள்ளாத ஷெனான், விருப்பமேயில்லாமல் மேலிடத்து உத்தரவுக்கு அடிபணியத் தயாரானார்.

“மற்றொருபுறம், இந்தச் செய்தியைக் கேட்ட போராளிகள், தமக்கு காகிதமும் பேனையும் தருமாறு கேட்டதுடன், ஒரு கடிதத்தை எழுதி உறவினர்களுக்குக் கொடுத்தனுப்பினர். மதிய நேரம் போராளிகள் பதின்மூவருக்கும் மதிய உணவு டிபன் கெரியரில் கொண்டுவரப்பட்டிருந்தது. இந்திய இராணுவத்தின் தீவிர பரிசோதனையின் பின் அந்த கெரியர்கள் போராளிகளுக்குக் கொடுக்கப்பட்டன.

“மிகச் சரியாக மாலை நான்கு மணிக்கு மேஜர் ஷெனான் சிங் 54வது படையணித் தலைமையதிகாரியிடம் பாதுகாப்பை ஒப்படைத்துவிட்டு தமது படையணியின் பாதுகாப்பை விலக்கிக் கொண்டு, சுமார் 500 மீற்றர் தொலைவே உள்ள தமது முகாமைச் சென்றடைந்தார். போராளிகளை இலங்கை இராணுவம் வசம் ஒப்படைத்துவிட்டது பற்றி டெல்லி இராணுவ அலுவலகத்துக்கும் தகவல் தெரிவித்தார்.

“சில நிமிடங்களில், இலங்கை இராணுவ வீரர் ஒருவர் மேஜர் ஷெனானிடம் ஓடி வந்து, போராளிகளை மீண்டும் அவரே பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார். ஆனால், மேலிடத்து உத்தரவு இன்றி எதுவும் செய்ய முடியாது என்று ஷெனான் மறுத்துவிட்டார். பின்னர், இந்திய இராணுவத்தின் உயரதிகாரி ஒருவர் ஷெனானிடம், போராளிகளைக் கையேற்குமாறு கூறினார்.

“அதற்கு ஷெனான், “இலங்கை இராணுவத்தினர் போராளிகளைக் கையளிக்க மறுத்தால் அவர்களைச் சுடலாமா? என்னிடம் கையளித்தபின் போராளிகளை இலங்கை இராணுவம் சுட்டுக்கொன்றால் நான் என்ன செய்வது? அல்லது இரு தரப்பினரும் பரஸ்பரம் தாக்குதலில் இறங்கினால் நான் என்ன செய்வது?” என்று கேள்வியெழுப்பினார். இந்தக் கேள்விகளுக்கான பதில்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி டெல்லி இராணுவ தலைமையகத்துடன் தொலைபேசியில் தொடர்புகொண்டார் அந்த உயரதிகாரி.

“அதேநேரம், வயர்லஸ் கருவி மூலம் ஷெனானைத் தொடர்புகொண்ட இலங்கை இராணுவ அதிகாரியொருவர், குமரப்பா மற்றும் புலேந்திரன் உட்பட பதின்மூன்று போராளிகளும் சயனைட் அருந்தி தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவித்தார். இந்தச் சம்பவமே விடுதலைப் புலிகளுக்கு இந்திய இராணுவத்தின் மீது காழ்ப்புணர்ச்சியாக உருவெடுத்து, கடைசியில் ராஜீவ் காந்தியைக் கொலை செய்வதற்கும் காரணமாக அமைந்தது.”

இவ்வாறு அந்த நூலில் சுஷாந்த் சிங் தெரிவித்துள்ளார்.