வடமாகாண முதலமைச்சரின் கருத்துத் தொடர்பாகக் கவலைப்படத் தேவையில்லை – இராணுவத் தளபதி!

வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கோரிக்கை தொடர்பாக தேவையின்றிக் கவலைப்படவேண்டாம் என இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்றைய செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வடமாகாணத்திலிருந்து இராணுவத்தினரை அகற்றுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார். அது தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும்அவர் தெரிவிக்கையில், வடமாகாண முதலமைச்சர் எனது நல்ல நண்பர்.

அவரது கோரிக்கைகள் தொடர்பில் கவலை கொள்ளத் தேவையில்லை.

தேவையின் அடிப்படையில் தான் இராணுவத்தினர் வடக்கில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அரசியல் நோக்கில் அல்ல.

போரின் போது, இராணுவத்தினர் நிலங்களைக் கைப்பற்றினர். ஆனால் போர் நடவடிக்கை முடிந்து விட்டது. எனவே, குறிப்பிட்ட அவதானிப்புக் காலத்துக்குப் பின்னர் படையினர் நிலங்களை மீளவும் உரிமையாளர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர்.

அத்தியாவசியமான முகாம்கள் தொடர்ந்து பேணப்படும். ஏனைய பகுதிகள் பொதுமக்களிடம் ஒப்படைக்கப்படும். இந்த முடிவுகளால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏதும் இல்லை.

சரியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.