வன்னிக்குள் புலிகள் என்ன புடுங்கினார்கள்..? அவசரப்படாமல் பொறுமையாக படியுங்கள்

தகவல் உதவி ரஜீவன் மாஸ்டர்
கட்டுரை,
புரட்சி வானொலிக்காக
கமலேஷ்

ஒரு வரலாற்றுப் பதிவு, அவசரப்படாமல் பொறுமையாக படியுங்கள், பல விடயங்கள் புரியும்.
விடுதலைப் புலிகளின் போரியல் வரலாற்றினையும், படைத்துறைக் கட்டமைப்பினையும், அரசியல், ராஜ தந்திரங்களையும் அலசி ஆராயும் பலர், தவற விட்ட ஒரேயொரு முக்கியமான விடயம்…வன்னிப் பெரு நிலப் பரப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இருந்த காலப் பகுதியில், புலிகள் என்ன செய்தார்கள் என்பதேயாகும்.
இப்படி ஒரு கேள்வி பலரின் மனங்களில்இருப்பது இயல்பானது..
அடேய் கமலேஷ் உனக்கு வேறு வேலை இல்லையா? இப்படி எழுத என்று பலரும் யோசிக்கலாம்.. பொறுமை, பொறுமை.. தொடர்ந்து படியுங்கள், புரட்சி வானொலிக்காக கமலேஷ் எழுதிய பதிவு இது. இங்கே தரப்படுகின்ற விடயங்களை நீங்கள் படிக்கையில்..அடடே இப்படியெல்லாம் நிகழ்ந்திருக்கா என்று மூக்கில் விரல் வைத்து ஆச்சரியப்படப் போவது உண்மை..
ஆம், தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் தலை நகராக இருந்த கிளிநொச்சியினை புலிகள் ஒரு குட்டிச் சிங்கப்பூர் போல் அழகாக உருவாக்கும் அரிய பணியினை முன்னெடுத்திருந்தார்கள்..நம்மில் எத்தனை பேருக்கு இது தெரியும்?

வன்னிக்குள் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் ஒரு நிழல் அரசாங்கத்தினை நடாத்திக் கொண்டிருந்தார். இது உண்மையிலே மேற்குலக நாடுகளின் அரசியல் கட்டமைப்பு முறைமைகளுக்கு நிகராக இருந்தது. இந்த அரசாங்கத்தில் லஞ்சம் என்ற பேச்சுக்கு இடமே இல்லை எனலாம். ஊழல் என்றால் என்ன என்றோ, அல்லது ஏழை பணக்காரன் எனும் ஏற்றத் தாழ்வு என்றால் என்ன என்றோ பலரும் அறியாது வாழ்ந்த நிலம் அது… அத்தனை கட்டுக் கோப்பு.
அரசியல் கட்சிகள், தொண்டர்களுக்கு இடையேயான பிரிவினைச் சலசலப்புக்கள், ஏன் கடை எரித்தல், ஊரைக் கொள்ளையடித்தல் உள்ளிட்ட இத்தியாதி விடயங்கள் ஏதும் நிகழாதிருந்த ஓர் அரசினை அவர் வழி நடத்திக் கொண்டிருந்தார்.

இவற்றுக்கு மகுடம் வைத்தால் போல தமிழீழ காவல் துறை.. ஏன் மேற்கு நாடுகளில், highway patrol போலீஸார் மறைந்திருந்து வேகமாக வாகனம் ஓட்டுவோரை பிடிப்பது போல், தமிழீழ காவல் துறையினர் 2002ம் ஆண்டிலே நவீன தொழில்நுட்பங்களோடு உந்துருளிகளில் வலம் வந்தார்கள் முகமாலை முதல், புளியங்குளம் வரையான ஏ9 நெடுஞ்சாலையில்..
இந்த தமிழீழக் காவல் துறையினைப் பார்த்த ஒவ்வோருவருக்கும், இன்று அது அவுஸ்திரேலியப் போலிஸையோ அல்லது லண்டன் போலீஸையோ நினைவுபடுத்தும்..காரணம் பணித்திறன் அப்படி!!
லஞ்சம் கொடுக்க யாராச்சும் முயற்சித்தால் போதும்…அவர்களுக்கு இருட்டறையும், பச்சை மட்டை அடியும் தான் பதில் சொல்லும்…

வருவாய்த் துறை – புலிகள் கப்பம் கோருகிறார்கள், வரி அறவிட்டு அறா விலைக் கொள்ளையடிக்கிறார்கள் என்று, சொல்லும் நாம் ஒவ்வொருவரும் மேலை நாட்டு அரசுகள் யாவும் மக்களின் வரிப் பணத்தில் தான் இன்றும் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பதனை நினைக்க தவறுகின்றோம். மக்களுக்காக போராட்டம் நிகழ்த்திய ஒரு விடுதலை அமைப்பு, மக்கள் பணத்தினை வரியாக பெற்று, கட்டுமானப் பணிகளைச் செய்வதில் என்ன தவறு? ஹி..ஹி வன்னிக்குள் கறுப்பு பணம், வியாபாரத்தில் கள்ளக் கணக்கு காட்டும் செயல் எல்லாம் செல்லவே செல்லாதிருந்தது. அத்தனை நேர்த்தியுடன் வருவாய்த் துறை செயற்பட்டுக் கொண்டிருந்தது எனலாம்…

தூய தமிழில் நிர்வாக முறைமைகள், தெருக்களின் பெயர்கள், வணிக நிலையங்களின் பெயர்கள் யாவும் இருந்தன. ஏன் தமிழீழ நீதிமன்றத்தில் கூட வாதம் யாவும் தூய தமிழிழீலே நிகழ்ந்தது… நகைச்சுவையாக சொல்வதானால்…ஒரு பாலியல் வன்புணர்வுச் சம்பவத்தினை ‘குற்றஞ்சாட்டப்பட்டவர் தன் மகிழ்வு உளி மூலம், பகீரதப் பிரயத்தனமாக பாதிக்கப்பட்டவரின் மகிழ்வுக் குளியினை துவசம் செய்தார் என்று சொல்லுவார்கள்”

வன்னியில் இருப்போர் இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிக்குள் செல்கையில் வன்னித் தமிழை வைத்தே பலர் அடையாளம் கண்ட அனுபவமும் உண்டு,
வல் வளைப்பு, முன்னரங்கு, வலிந்திழுத்த தாக்குதல், சராமரியான எறிகணை வீச்சு, தொடரூந்து மீதான குண்டு வீச்சு என பல சொற்களை நாம் இலகுவில் மறக்கலாகாது..
வன்னியில் வளர்த்தெடுக்கப்பட்ட கலைகள்..இது பற்றி தனிக் கட்டுரை பல தொகுப்புக்களாக எழுதலாம்..அத்தனை சிரத்தையுடன் தலைவரால் வளர்க்கப்பட்டது தமிழர் கலைகள்…

2007ம் ஆண்டில் தமிழகத்தின் மிகச் சிறந்த சிற்பாச்சாரிகளை வரவைத்து கிளிநொச்சியில் தமிழீழத் தேசிய நூதன சாலையினை உருவாக்கும் பணியினை ஆரம்பித்திருந்தார்கள்… உட்சென்று பார்த்தால்..உள்ளம் சிலிர்க்கும், தலை விறைக்கும்…காரணம் அவ்வளவு சிறப்பான கலையம்சம் நிறைந்த வடிவமைப்பு..
அழகான தெருக்கள் கிளிநொச்சி மாநகரில், சந்திரன் பூங்கா, அதற்கு அருகே தொங்கு பாலம்..பறவைகள், விலங்குகள் பெயர்கள் யாவும் தமிழீழத் தமிழில்…
இது மட்டுமா… புலிகளின் மருத்துவத் துறை, மருத்துவப் போராளிகளின் அசாத்திய திறமை, அவர்கள் குறுகிய மூல வளங்களின் உதவியுடன் நிகழ்த்திக் காட்டிய சாதனைகள்…எத்தனை பக்கம் வேண்டுமானாலும் எழுதலாம்…
பொன்னம்பலம் ஞாபகர்த்த மருத்துவமனை ஒரு குட்டி அப்போலோ மருத்துவமனையை கண் முன்னே கொண்டு வரும் எனலாம்.

பிரபாகரன் தன்ர மகனை, மகளை மட்டும் வெளிநாட்டில படிக்க அனுப்பிட்டு ஊரார் பிள்ளைகளை வைச்சு சண்டை பிடிக்கிறார் என்று சொன்னவைக்கு வியப்பை கொடுத்தது தலைவர் மகனே தலைமை தாங்கி வெளியிட்ட கணினிச் சஞ்சிகை.. பல வண்ணங்களில் மிக மிகச் சிறப்பான சஞ்சிகையாக வந்தது கணி நுட்பம் எனும் பெயரில், இலங்கையின் வேறு எந்தப் பகுதியிலும் அப்படி ஒரு சஞ்சிகையினை யாரும் கண்டிருக்க மாட்டீர்கள்..
புகைப்படத் துறை, அறிவமுது பதிப்பகம், புத்தகசாலை, அச்சுக் கூடத் துறை, என நூல்கள் உருவாக்கங்கள் மிக நேர்த்தியாக இந்த துறையினரால் நிகழ்த்தப்பட்டன.

வன்னிக்குள் இயங்கிய வங்கி..ஆம் தமிழீழ வைப்பகம்..இது பற்றி சொல்லவா வேண்டும்? சிறுவர்களுக்கான தேட்டக் கணக்கு முதல், பெரியோருக்கான கணக்கு வரை, விவசாய உதவி உட்பட பல முயற்சிகள்,
பொருண்மிய மேம்பாட்டுக் கழகம் – ஒரு மரம் வெட்டினால், இன்னோர் மரம் நடு எனும் கொள்கையுடன் இயங்கி வந்ததை மறக்கவா முடியும்?

*ஒரு மரம் வெட்டினால் ஒரு மரம் நட வேண்டும் எனும் அறிவிப்பு எல்லா இடமும் காணப்படும்! காட்டுப் பாதைகளிலும் இந்த அறிவிப்பினை வைத்திருப்பார்கள். ஒட்டுசுட்டான் புதுக் குடியிருப்பு வீதியில் கூட ஆள் அரவமற்ற இடங்களிலும் இந்த அறிவிப்பினைப் பார்த்திருக்கிறேன்.
எம் இயற்கை வளங்களினைப் பாதுகாக்க வேண்டும் எனும் நோக்கில் தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தினை அமைத்தார் தலைவர்.
இதுவும் வன்னியிலும் சரி, முன்னர் யாழ், மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் இலங்கையின் ஏனைய வட கிழக்குப் பகுதியில் இயங்கிய காலத்தில் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்தியது.

ஒரு குட்டி வன்னிக்குள் 7 விமான ஓடுபாதைகள்..அப்படியானால் புலிகளிடம் ஒரு நாடு கொடுக்கப்பட்டிருந்தால் நிச்சயமாக சொல்லவா வேண்டும்? எப்படி இருந்திருக்கும் என்று?

மேற்குலகில் போர் வீரர்களை எப்படி மரியாதையுடன் நினைவு கூருகிறார்களோ அது போல் ஊரில் துயிலும் இல்லம்..கல்லறைகள் ஒவ்வொன்றும் நேர்த்தியுடன் வடிவமைப்பு. வானொலி தொலைக்காட்சி யாவும் தூய தமிழ் உச்சரிப்புடன்..
இலங்கையின் வானொலி வரலாற்றில், வோக்கி டோக்கி உதவியுடன் முதன் முதலாக பாடல் விரும்பி கேட்கும் நிகழ்ச்சியை நடாத்தியதே தமிழீழ வானொலி தான். நம்மில் எத்தனை பேருக்கு இது நினைவிருக்கு, பங்குபற்றி பாடல் கேட்டவர்கள் களமுனைப் போராளிகள்.

இன்னும் சொல்ல அதிகம் இருக்கு..இதற்கே ஆச்சரியப்பட்டால் என்ன செய்வது?

*ஆயப் பகுதி என்று ஒன்றினை உருவாக்கி வைத்திருந்தார்கள். இதன் மூலம் வரி, தீர்வை விலக்கு போன்றவற்றினைப் புலிகள் நிர்வகித்தார்கள். புலிகள் பகுதிக்குள் இணைய வசதி, மின்சார வசதி வந்த பின்னர் இந்த ஆயப் பகுதிக்கு என்றே தனியான ஓர் இணையம் உருவாக்கி உலகெங்கும் கொண்டு சென்றார்கள்.
*அகதிகளுக்கும், வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கும் உதவுவதற்கு என்று புலத் தமிழ் உள்ளங்களின் உதவியோடு இயங்கும் வகையில் பிரபாகரன் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினைக் கட்டியெழுப்பினார்.
இந்தப் புனர்வாழ்வுக் கழகத்திற்குச் சொந்தமான 400 மில்லியன் கோடி ரூபாவினை இலங்கை அரசு 2006ம் ஆண்டில் கையகப்படுத்தியிருந்தது.
*படகுகளை வடிவமைக்க, எம் தேசத்தின் கடற் தொழிலை விரிவாக்க வெளி நாட்டு உதவியுடன் படகு கட்டுமானத் துறையினை உருவாக்கியிருந்தார் பிரபாகரன். இது 2002 இல் உருவாக்கப்பட்டது.

*வெளிநாட்டில் உள்ள தமிழ் அன்பர் ஒருவரின் உதவியுடன் முதன் முதலாக பசுப் பாலைச் செயற்கை முறையில் இயந்திரங்களின் உதவியுடன் எடுக்கும் முறையினை உருவாக்கினார்கள். பசுப்பால் பதனிடுதல், பாக்கட்டில் அடைத்து பாலை விற்றல் ஆகியவை இம் முறை மூலம் செயற்படுத்தப்பட்டது. இந்த நிறுவனமும் கிளிநொச்சியில் தான் முதன் முதலில் அமைக்கப்பட்டது. பெயர் ஞாபகம் வரவில்லை.
*சர்வதேச தரத்திலான ஒரு கிரிக்கெட் ஸ்டேடியம் அறிவியல் நகர் பகுதியில் நிர்மானிக்க திட்டம் தொடங்கப்பட்டது பின்பு அதுவும் சில காரணங்களால் கைவிடப்பட்டது அதுவும் நிர்மானிக்கப்பட்டு இருந்தால் புகழ் பெற்ற மைதானமாக மாறியிருக்கும்

*போராளிகள் வெறுமனே களப் பணிகளில் மாத்திரம் இருக்கக் கூடாது, கல்வியிலும் முன்னேற வேண்டும் எனும் நோக்கில் அறிவியல் நகரில்
தூயவன் அரசறிவியற் கூடம்,
லெப் கேணல் நவம் அறிவுக் கூடம்,
துளசிராம் இலக்கிய வட்டம்,
படையத் தொடக்கப் பயிற்சிக் கல்லூரி
மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான கணினி கலையகம், எனப் பல கல்விக் கூடங்களைத் பிரபாகரன் உருவாக்கியிருந்தார்.

*வன்னிக்குள் சுனாமி வந்த நேரம் தந்திரமாக வெளிநாட்டுடன் பேசி, காலநிலை, வானிலையினை அவதானிக்கும் நோக்குடன் இண்டெல்சாட் எனும் சாட்டிலைச் (satellite) சேவையினை வரவைத்தார்கள் புலிகள். பின்னர் அதன் மூலம் தமிழீழ காலநிலை அவதானிப்பு நிலையத்தினையும், வானிலை அவதானிப்பு நிலையத்தினையும் உருவாக்கினார்கள்.
அதன் பிறகு செய்மதியில் இயங்கக் கூடியதாகவும், அனைத்துலகினையும் சென்று சேரக் கூடியதாகவும் தமிழீழத் தேசியத் தொலைக் காட்சியினையும் உருவாக்கினார்கள்.
*தமிழ் மக்களுக்காக தமிழ் பேசும் மக்களால், போராளிக் கலைஞர்களால் நடாத்தப்படும் வானொலி இயங்கிக் கொண்டிருந்தது, பல புதிய தொழில்நுட்ப அம்சங்களுடன்.

*இலங்கையின் வரலாற்றில் மிகச் சிறந்த ஒளிப்பதிவுடனும், தொழில் நுட்பங்களுடனும் கூடிய படங்கள் வன்னியில் தான் வெளியாகியது.
இவற்றை வெளியிட்ட உரிமை, தமிழீழ திரைப்பட உருவாக்கற் பிரிவிற்கும், நிதர்சன நிறுவனத்தினருக்குமே சாரும்!
அதே போல ஒலிப் பதிவில் சிறந்த பாடல்களை உருவாக்கிய பெருமை தர்மேந்திராக் கலையகத்திற்கும், நிதர்சன நிறுவனத்திற்குமே சாரும்.
*தமிழீழ மக்களின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் கல்விக் கழகத்தினை உருவாக்கினார்கள். அதன் பொறுப்பாளராக திரு.வே.இளங்குமரன் அவர்கள் இறுதிக் காலம் வரை விளங்கினார்கள்.
இதனூடாக வன்னியில் புலமைப் பரிசில். உயர்தரப் பரீட்சை, சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு முன்னோடிப் பரீட்சைகளும், ஆண்டிறுதிப் பரீட்சைகளும் நிகழ்த்தப்பட்டன.
*இலங்கை வரலாற்றில் முதன் முதல் வெளி நாடுகளில் உள்ளது போன்று அளவுக்கு மீறிய ஸ்பீட்டில் ஓடும் வாகனங்களைப் பிடிப்பதற்கான கருவினையும், வேகத் தடைக் கண்காணிப்பினை நிகழ்த்திய பெருமையும் தமிழீழ காவல் துறையினையே சாரும்.
*இலங்கை அரசால் தமிழர் தம் வரலாறுகள் மறைக்கப்பட்டு, இளஞ் சந்ததிக்குப் பாட நூல்கள் ஊடாகத் திரிபுபடுத்தப்படுவதனை உணர்ந்த புலிகள் கல்விக் கழகம் ஊடாக 2000ம் ஆண்டிலிருந்து வரலாற்றுப் புத்தகங்களையும், ஏனைய சில பாட நூல்களையும் அச்சிட்டு வெளியிடத் தொடங்கினார்கள்.
*தரமான போக்குவரத்துச் சேவையினை மக்களுக்கு வழங்கும் நோக்கில்
தமீழ போக்குவரத்துச் சேவையினையும்,
போக்குவரத்து கண்காணிப்புச் சேவையினையும் உருவாக்கினார்.
*இறந்த போர் வீரர்களை என்றுமே எம் இதயத்தில் இருத்தி வைக்கும் நோக்கில் மாவீரர் துயிலும் இல்லங்களை, கல்லறைகளை உருவாக்கினார்.
அதே போல மாவீரர் விபரங்களைத் திரட்டிட மாவீரர் பணிமனையினை உருவாக்கியிருந்தார்.
ஊர்கள் தோறும் சனசமூக நிலையம், நூலகம் ஆகியவை இல்லையே எனும் குறையினைப் போக்க மாவீரர் படிப்பகத்தினை உருவாக்கும் உத்தரவினை பிரபாகரன் வழங்கியிருந்தார்.
*கலைகளையும், இலக்கியங்களையும் வளர்க்கும் நோக்கில் தமிழீழ கலை பண்பாட்டுப் பிரிவினை உருவாக்கினார்.
மக்களுக்கும், புலிகளுக்கும் இடையிலான தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்கில் ஊர்கள் தோறும் அரசியற் துறை அலுவலகங்களை நிர்மாணித்திருந்தார்.
*பாலர் முன்பள்ளிகள், ஆதரவற்ற சிறுவர்களுக்கு அண்ணனாகவும், மாமனாகவும் தான் இருக்கிறேன் எனும் நோக்கில் அரவணைத்திட காந்தரூபன் அறிவுச் சோலை, செஞ்சோலை சிறுவர் இல்லம் ஆகியவற்றினை அமைத்திருந்தார்.
இன்னும் அதிகம் இருக்கு…இன்னோர் கட்டுரையில் படிக்கலாம்.

பிற் குறிப்பு: ஆடின காலும், பாடின வாயும் சும்மா இருக்காதாம். என்னதான் அரசியல் பதிவு எழுதுவதில்லை என்று சபதம் எடுத்தாலும், சில கட்டுரைகளைப் படிக்கையில் வரலாறுகள் மாற்றப்படுகிறதே எனும் ஆதங்கம்…எழுத வேண்டும் எனும் உந்துதலைத் தந்து விடுகிறது.

தகவல் உதவி ரஜீவன் மாஸ்டர்
கட்டுரை,
புரட்சி வானொலிக்காக
கமலேஷ்