15073462_198837190570713_1982792279811595730_n

வயதுடன் வளர்ந்த இலட்சிய உறுதி…………

தமிழரின் மண்ணை மீட்கப் புலிக்கொடி ஏற்றிப் புதுவீரம் நிலைநாட்டி, தமிழ் வீரத்தை எமது சந்ததியினருக்கு மீளவும் காட்டி, தொடர் வெற்றிகள் பலவற்றிற்கு உரமூட்டி, தமிழரின் உரிமைப் போரிற்குத் தலைமை தாங்கி, ஒரு தேசிய இனத்தின் தன்னிகரற்ற தலைவனாக மதிக்கப்பட்டு,

இன்று பொன்விழா கொண்டாடிடும், எனது மதிப்பிற்கும், அன்பிற்கும் உரிய தமிழ் தேசியத் தலைவன் தம்பி பிரபாகரன் பற்றி நான் வெளிநாடுகளில் இருந்து வியந்து அவதானித்தவற்றில் சிலவற்றை, அவரின் பொன்விழா சம்பந்தமாக வெளியிடப்படும் இந்த மலரில் பதிவு செய்வதற்கு நான் பாக்கியம் பெற்றிருப்பதோடு, பெருமிதம் அடைய வேண்டியவனாகவும் இருக்கின்றேன். தம்பி பிரபாகரன் 1954ல், பிறந்த வல்வெட்டித்துறைக்கு அருகாமையில் உள்ள ஊரில், அவர் பிறப்பதற்கு சில வருடங்கள் முன்னர் பிறந்த ஒருவன் என்ற முறையிலும், 1970ம் ஆண்டு நான் பேராதனைப் பல்கலைக்கழகம் புகுவதற்கு ஆயத்தமாகின்ற வேளையிலே, தமிழ் மாணவர் பேரவையின் அங்குரார்ப்பண பகிரங்க நிகழ்ச்சியான மௌன ஊர்வலத்தில் (திருநெல்வேலிச் சந்தையடியில் ஆரம்பமாகி, யாழ் GREEN FIELD மைதானத்தில் முடிவடைந்த பொதுக்கூட்டத்தில்) கறுப்புத் துணியால் வாய் கட்டி கலந்து கொண்ட ஒருவன் என்ற முறையிலும் இந்த சிறு வியப்புக் கட்டுரையை பதிவு செய்வதற்கு தகுதியுடையவன் என்ற திருப்தியினால் உந்தப்பட்டவனாகவே இதனை வரைவதற்கு முன்வந்துள்ளேன்.

நான் எனது உயர் பட்டப் படிப்பிற்காக இலங்கையை விட்டு புறப்பட்ட வருடம் தான் (1978) தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தாம் மேற்கொண்ட 11 இராணுவ நடவடிக்கைகளுக்கு உரிமை கோரிய வருடம். தனது இளந்துளிர் வயதான 14வது பிராயத்தில் இந்தியச் சுதந்திரப் போராளிகளாகத் திகழ்ந்த சுபாஸ் சந்திரபோஸ் மற்றும் பகவத்சிங் ஆகியோரின் வழியைப் பின்பற்றி, தனக்கு வயதிற்கு மூத்தவர்களாகிய, ஒரே இலட்சியம் கொண்ட, இன்னும் 7 பேருடன் இணைந்து தலைமறைவாக செயற்பட ஆரம்பித்த தம்பி பிரபாகரன் 1978ல் ஏற்கனவே 10 வருடங்கள் தலைமறைவான விதத்தில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு விட்டது பின்னர்தான் என்போன்றோருக்கு எல்லாம் தெரிய வந்தது.

இக்காலப்பகுதியில் தம்பி பிரபாகரன் பற்றி எமக்குத் தெரிந்தது, இவர் இலங்கைப் பொலிசாரால் தேடப்பட்டு வந்த தமிழ்த் தீவிரவாதிகளில் ஒருவர் என்பது மட்டுமேயாகும். தம்பி பிரபாகரனின் படம் உட்பட்ட சில தமிழ்த் தீவிரவாத இளைஞர்களின் படங்கள் அடங்கிய சுவரொட்டி ஒன்று, பேராதனைப் பல்கலைக்கழகப் புகையிரத நிலையமான ‘சரசவி உயன’ உட்பட பல புகையிரத நிலையங்களின் சுவர்களில் ஒட்டப்பட்டிருந்தமையாலேயே இது எமக்கெல்லாம் தெரிய வந்தது. இக்காலப்பகுதியில் நான் இதே பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பொறுப்பேற்ற பின்னர் எனது அலுவலக அறைக்கு அடிக்கடி விஜயம் செய்யும், அப்பொழுது மாணவனாகவும், ஒரு JVP ஆதரவாளனாகவும் இருந்தவரும், தற்போது தம்பி பிரபாகரனை ஒரு பயங்கரவாதியென்று உலகிற்கு பறை சாற்றும் பணியில் முன்னணியில் திகழ்பவருமான jayathilaka, என்னுடன் இந்தச் சுவரொட்டியில் இருந்த இளைஞர்கள் பற்றியும், அவர்களின் சாதனைகளைப் பற்றியும் வியந்து கதைப்பது வழக்கம்.

அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சியன்றில் இவருடன் நான் இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைபற்றி வாதாடியபோது, dayan என்றொருவர் அப்போது எனது வாழ்வில் குறுக்கிடாது இருந்திருந்தால், நான் ஊடகத்துறையினூடாக எமது மக்களின் உரிமைப் போராட்டத்திற்குச் செய்துவரும் பங்களிப்பை இந்தச் சிறு அளவிலேனும் செய்யத்தூண்டப்பட்டிருப்பேனா என்று ஒருகணம் சிந்தித்ததுமுண்டு. அக்காலம் தொடக்கம் தம்பி பிரபாகரனின் செயற்பாடுகளை வெளிநாடுகளிலிருந்து, பெரும்பாலும் ஊடகங்களுடாக கூர்மையாக அவதானித்து வந்ததால்தான் நான் இன்று எனது இந்தச் சிறு வியப்புக்கட்டுரையை வரையக்கூடிய நிலையில் உள்ளேன்.

பள்ளிப் பையனாக ஆயுதப் போராட்டத்தில் இறங்கிய தம்பி பிரபாகரன், ஒருவித இராணுவக் கல்லூரிப் பயிற்சியுமின்றி, உலகின் எந்தவொரு விடுதலை இயக்க தளபதியையும் விட அதிசிறந்த தானைத் தளபதியாக யாவராலும் மதிக்கப்படுவதற்கு, அவர் தான் கொண்ட இலட்சியத்தில் கொண்டிருக்கும் உறுதியும், அவரின் வயது முதிர முதிர இந்த உறுதியும் வளர்ந்து வேரூன்றியமையுமே முக்கிய காரணமென்று நான் மதிப்பிடுகின்றேன். 1958ம் ஆண்டு நடைபெற்ற தமிழருக்கெதிரான இன ஒழிப்பு நடவடிக்கையின்போது, உருகும் தாரினுள் அமிழ்த்தி கொடூரமாக கோயில் ஐயர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை பற்றி ஒரு விதவைப் பெண் வர்ணித்ததைக் கேட்டதனால், இனியும் இளந்தமிழர் பார்த்துக் கொண்டிருந்தால் அது அடிமைத்தனம் என்று எண்ணியே தம்பி பிரபாகரன் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்ததாக நாம் அறிகின்றோம்.

தான் எடுத்திருக்கும் பாதை வெகு கரடுமுரடானது என்பதை அவர் உணர்ந்திருந்தும், தனது இலட்சியத்தை அடைவதற்கு தியாகங்களை செய்வதற்கு அவர் தனது இளவயதிலே தயாராகி விட்டதற்கு ஆதாரங்களும் உண்டு. அவர் சார்ந்திருந்த ஆரம்ப சிறு குழுவானது தமது செயற்பாடுகளுக்கென ஒரு கைத்துப்பாக்கியை கொள்வனவு செய்ய விரும்பியபோது தேவைப்பட்ட ரூ. 150ஐ திரட்டுவதற்காக, இவரின் ஒரே ஒரு சொத்தாக அப்போது இவரிடமிருந்த இவரது சகோதரியின் திருமணத்தின் போது இவரிற்கு கிடைத்த தங்க கணையாழியை விற்று, ரூ. 50ஐ திரட்டிக் கொடுத்ததுடன் ஆரம்பித்த இவரது தியாகம், தனது வாழ்நாளின் பாதியை சக பிரஜைகள் போன்று உலகை அனுபவிக்க முடியாத விதத்தில் கழித்தபடி தொடர்கின்றது.

ஆண்டாண்டு காலமாகத் தொடர்ந்த ஆயுதப் போராட்டத்தின் போது பல சோதனைகளைத் தம்பி பிரபாகரன் எதிர்கொள்ள நேர்ந்தது. இவரின் பார்வையாளராக இருந்த எமக்கெல்லாம் பலதடவைகள் மனம் தளர்ந்த போதிலும், அவர் மனம் தளராது செயற்பட்டு அந்தத் தடைகளையெல்லாம் தாண்டுவதற்கு அவர் தனது இலட்சியத்தில் கொண்டிருந்த உறுதியே உறுதுணையாக விளங்கி இருந்திருக்கின்றது என்று கூறினால் அது மிகையாகாது. இதுபற்றி நான் தம்பட்டம் அடிக்க வேண்டிய அவசியமில்லை. இதுபற்றி அந்தக்காலகட்டங்களில் இந்தச் சோதனைகளையே உருவாக்கக் காலாக இருந்த சிலரே இதற்குச் சாட்சியம் கூறியுள்ளனர். தம்பி பிரபாகரன் எதிர்கொண்ட முதல் பாரிய சோதனை அவர்மேல் பிரதமர் ராஜீவ் காந்தி நிர்வாகத்தால் திணிக்கப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தமாகும்.

இதனூடாகத்தான் அவர் முதன் முதலாகப் பாரிய ஒரு அரசியல் இராணுவச் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டிருந்ததை யாவரும் அறிவர். இந்தச் சோதனையை தம்பி பிரபாகரன் எவ்வாறு தான்கொண்ட இலட்சியத்தில் அணுவும் அசையாது செயற்பட்டு முறியடித்தார் என்பது இப்பொழுது பலராலும் பதியப்பட்டிருக்கும் சரித்திர மாகும். இதில் முக்கியமானவர் இந்த இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் சூத்திரதாரிகளில் ஒருவரும், அப்பொழுது இந்தியாவின் வெளிவிவகாரச் செயலாளராக விளங்கியவருமான joythindra dixit ஆவார். இவர் தனது அனுபவத்தைப் பின்னர் 1998ம் ஆண்டு தான் எழுதிய “Assignment colombo” என்ற புத்தகத்தில், தனது கருத்துக்களாகக் குறிப்பிட்டுள்ள சிலவற்றை இங்கு பதிவு செய்வது பொருத்தமானது என எண்ணுகிறேன்.

தமிழர்களின் நலன்களைப் பிரதி நிதித்துவப்படுத்துவதில் ஒரு சிறந்த அரசியல் – இராணுவ சக்தியாக முன்நிலைக்குத் த. ஈ. வி. புலிகள் உயர்ந்ததற்கு Dixit அவர்கள் 6 காரணங்களைத் தனது புத்தகத்தில் நிரல்ப்படுத்தியுள்ளார். அதிலே முதலாவதாக அவர் குறிப்பிட்டுள்ளதுதான் இங்கு குறிப்பிடப்பட வேண்டியதாகும். முதலாவதாக, “இந்த இயக்கத்தின் தலைவரான வே. பிரபாகரனிடம் காணப்படும் கட்டுப்பாடு, மனவுறுதி, இலங்கைத் தமிழரின் மீட்சி என்ற இலட்சியத்திற்காகத் தன்னை அர்ப்பணம் செய்துள்ளமை ஆகிய குணாதிசயங்கள் ஆகும். இவர் யாராலும் எப்படி விமர்சிக்கப்பட்டாலும், இவரின் நெஞ்சில் சுதந்திரதாகம் சுவாலை விட்டெரிந்து கொண்டிருப்பதையும், இவரிடம் தன்னை அதற்கு அர்ப்பணிக்கும் சுபாவம் உள்ளதென்பதையும், இவர் இயற்கையான இராணுவ வல்லமையைக் கொடையாகப் பெற்ற ஒருவர் என்பதையும் எவரும் மறுக்க முடியாது”

என தனது புத்தகத்தில் தம்பி பிரபாகரனைப் புகழ்ந்துள்ளார் Dixit அவர்கள். இதேபோன்றுதான் இந்திய அமைதி காக்கும் படை முழுவதற்கும் பொறுப்பாகப் பணிபுரிந்த லெப்டினென்ட் ஜெனரல் Dipinder singh அவர்களும் தான் எழுதிய ‘IPKF in SRILANKA’ என்ற புத்தகத்தில் தம்பி பிரபாகரனுக்குப் புகழாரம் சூட்டியதோடு நின்றுவிடாது, எப்பொழுதும் இந்திய அமைதிப்படையினரைத் தம்மேல் ஆரோக்கியமான மதிப்பு வைக்க வைத்துள்ள வியக்கத்தகுந்த அதி அளவிலான ஊக்கம் மற்றும் போர்புரியும் திறமை கொண்ட விடுதலைப்புலிகளுக்கு, தனது புத்தகமானது இடது கையால் வழங்கும் ஒரு salute என்றும் வர்ணித்துள்ளமை தம்பி பிரபாகரனின் இலட்சிய உறுதியைக் கௌரவிப்பதாகவே அமைந்துள்ளது.

இந்திய அமைதி காக்கும் படையின் யாழ். பகுதித் தளபதியாகப் பணிபுரிந்த லெப்டினென்ட் ஜெனரல் s.c.sardesh pande வெளியிட்டுள்ள ‘Assignment jaffna என்ற புத்தகத்திலும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளிற்குப் புத்தக ஆசிரியரால் புகழாரம் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த இயக்கத்திடம் காணப்படும் கட்டுப்பாடு, தம்மை எதற்கும் அர்ப்பணிக்கும் தன்மை, உறுதி, ஒரு குறிக் கோளை நோக்கிச் செயற்படும் திறமை, மற்றும் தொழில்நுட்பவியல் என்பவற்றால் தமிழீழ விடுதலைப் புலிகள் மேல் நான் மிகவும் மதிப்பு வைத்திருக்கின்றேன் என்றும், தமிழர் மத்தியில் நிலவும் உணர்வலைகளின் பிரதிபலிப்பே த. ஈ. வி. புலிகள் என்றும், இந்த உணர்வலைகள் தணியா திருக்கும் வரை விடுதலைப் புலிகளை அழித்துவிட முடியாது என்ற அபிப்பிராயத்துடனே நான் திரும்பினேன் என்றும் லெப்டினென்ட் ஜெனரல் pande அவர்கள் தெரிவித்துள்ளமை இந்த இயக்கத்தின் தலைவரின் இலட்சிய உறுதிக்குச் சான்று பகர்வதாகவே அமைந்துள்ளது.

1970களில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட பல புரட்சிகரத் தாக்குதல்களை அடக்குவதற்காக, hitler rommel ற்குக் கொடுத்த கட்டளை போன்று, காலம் சென்ற ஜனாதிபதி யி.ஸி.ஜெயவர்த்தனா தனது மருமகனான brigadier weeratunga விற்கு, வடக்கிற்குச் சென்று 6 மாதத்தில் எல்லாவித பயங்கரவாதத்தையும் அடக்கி வரும்படி உத்தரவிட்டிருந்தார். brigadier weeratunga இந்தக் கட்டளையை நிறைவேற்ற அவருக்குப் போதிய வல்லமையைக் கொடுக்கும் நோக்குடன் 1979ம் ஆண்டு july மாதம் கொடூரமான அந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தையும் நடைமுறைக்குக் கொண்டுவந்தார் ஜனாதிபதி ஜெயவர்த்தனா. ஆனால் ஒரு கைத்துப்பாக்கியுடன் ஆரம்பித்த இயக்கத்தை மரபுவழி இராணுவத்தைக் கொண்ட சிறீலங்காப் படையினை எதிர்த்து ஓயாத அலைகள் I,II,III என்று 3 பாரிய யுத்தங்களைப் புரிந்து பீரங்கிப்படையணி, தாங்கி எதிர்ப்புப் படையணி, கடற்புலி என்ற கடற்படை ஒரு சிறிய வான்படை என்பவற்றைக் கொண்டதாக, சிறீலங்கா இராணுவத்திற்குச் சமபலம் உள்ள, மரபுவழி யுத்தம் புரியும் வல்லமை பொருந்திய ஒரு இராணுவ இயக்கமாக த. ஈ. வி. புலிகளை மாற்றியமைத்துப் பதிலடி வழங்கினார் தளபதி தம்பி பிரபாகரன் அவர்கள்.

இந்தச் சாதனையை நிலைநாட்டுவதற்கு இவரிடம் காணப்படும் இலட்சிய உறுதியே முக்கிய காரணியாக விளங்கியது என்பதை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. இயற்கையே தனது நண்பனென்றும், வாழ்க்கையே தனது தத்துவ ஆசானென்றும், சரித்திரமே தனது வழிகாட்டியெனவும் கூறிக்கொள்ளும் தம்பி பிரபாகரன், மனிதகுல மீட்புக்காக யேசுபிரான் எப்படித் தன்னைப் பிறர் இழிவுபடுத்துவதைப் பொருட்படுத்தாது வாழ்ந்து காட்டினாரோ, அவ்வழியைப் பின்பற்றித் தம்பி பிரபாகரனும் தமிழ் மக்களின் மீட்பிற்காக தான் கொண்ட இலட்சியத்தை அடைவதற்காகத் தன்னைப் பிறர் எந்தவிதமான இழிவிற்கு உட்படுத்துவதையும் சகித்துக் கொள்ளவும், சிலசமயங்களில் இதனால் பூரிப்படையவும் தயாராக உள்ளமையானது அவரின் இலட்சியத்திற்கான உறுதிக்குச் சான்று பகர்வதாகவே அமைகின்றது.

சிறீலங்கா அரசினால் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் வரிசையில் முதலாவது இடத்தில் தம்பி பிரபாகரன் விளங்குவது பற்றி அவரின் உணர்வலைகள் எப்படியாக இருக்கின்றது என்று அவரிடம் ஒரு தடவை பத்திரிகையாளர் ஒருவர் கேட்டிருந்தார். அதற்குத் தம்பி பிரபாகரன் பின்வருமாறு பதிலளித்திருந்தார்; பிரித்தானியர்கள் ஒரு Irish இனத்தவரைப் பயங்கரவாதி என்று குற்றம் சுமத்தினால் அவர் உண்மையான நாட்டுப் பற்றாளன் என்று ஒரு ஐரிஸ் தலைவர் ஒருமுறை குறிப்பிட்டிருந்தார். அதேபோன்றுதான் சிறீலங்கா அரசு என்னைத் தாம் தேடி வருபவர்களில் அதிமுக்கியமானவர் என்று குறிப்பிடும் போது நான் ஒரு உண்மையான தமிழ்த் தேசப்பற்றாளன் என்பதையே அது சுட்டிக் காட்டுகின்றது. ஆகவே தேடப்பட்டு வருபவர்களில் அதிமுக்கியமானவனாகப் பிறர் என்னைக் கருதுவது பற்றி நான் பெருமையடைகின்றேன்.

இவரின் இந்தக் கூற்றானது, இழிமையின் விளிம்பிற்குத்தள்ளப்படும் சந்தர்ப்பத்திலும் கூட அதனை ஒரு தியாகமாக மதித்துத் தான் கொண்ட இலட்சியத்தில் உறுதியாக இருக்க தம்பி பிரபாகரன் விரும்புவதையே, எடுத்துக் காட்டுகின்றது. எமது போராட்ட வரலாறுபற்றி BBC, Voice of america போன்ற சர்வதேச வானொலிச் சேவைகளுடாக விமர்சிக்கப்பட்டவற்றையும், இதுபற்றிய முக்கிய செய்திகளையும் 1983ம் ஆண்டு இனக்கலவரம் நடைபெற்ற நாள் தொடக்கம் நான் நாளாந்தம் கேட்டு, ஒலிப்பதிவு நாடாக்களில் பதிவு செய்து வந்தேன். இந்தியப்படை யாழ் மண்ணில் சென்று இறங்கியதையும், தம்பி பிரபாகரன் சுதுமலைக் கூட்டத்தில் அதனை வரவேற்றுப் பேசியதையும், pacific தீவு ஒன்றிலிருந்து கேட்டு ஒலிப்பதிவு செய்து கொண்டதும் எமது போராட்டம் முடிவுக்கு வந்து விட்டது என்று தப்புக்கணக்குப் போட்டு எனது ஒலிப்பதிவு செய்யும் வேலையையும் அன்றுடன் நிறுத்திக் கொண்டேன்.

ஆனால் தம்பி பிரபாகரனோ பின்னர் இந்தியப் படைகளால் வன்னிக் காட்டினுள் வைத்துச் சுற்றி வளைக்கப்பட்ட போதிலும் சரி, பின்னர் யாழ்குடா நாட்டைச் சிறீலங்காப் படைகள் கைப்பற்றிய போது சாதுரியமாகப் பின்வாங்கி வன்னிக் காட்டினுள் மீண்டும் புகுந்த போதிலும் சரி மனம் தளராது தான் கொண்ட இலட்சியத்தில் இருந்து ஒரு அணுவேனும் விலகாது தான் கொண்ட இலட்சியத்தில் உறுதியாக நின்றதன் பயனாகவே த.ஈ.வி.புலிகள் இயக்கம் இன்று தற்போதைய சர்வதேச அரசியல் நிலைப்பாடுகள் மத்தியிலும், ஆல்போல் உலகளாவிய ரீதியில் கிளைகள் பரப்பி, நன்றாக விழுதுகள் பரப்பி வேரூன்றி நிற்கின்றது. இதனூடாகத் தம்பி பிரபாகரனுக்கும் என்போன்றோருக்கும் இடையில் இருக்கும் பாரிய வித்தியாசத்தைக் காண்கின்றேன்.

தற்போது ஸ்தம்பிதம் அடைந்து போயிருக்கும் சமாதான நடவடிக்கைகளை உரிய நேரத்தில் அரசியல் சாணக்கியத்துடன் ஆரம்பித்து வைத்த தம்பி பிரபாகரன், பின்னர் சிறீலங்கா அரசும் அதற்கு முண்டு கொடுத்துத் தத்தமது இலட்சியங்களை அடைய முண்டியடித்துக் கொள்ளும் பிறநாட்டு அரசுகளும், தமிழர் தரப்பினை ஏமாற்ற முற்படுவதைத் தீர்க்க தரிசனத்துடன் உணர்ந்து கொண்ட தம்பி பிரபாகரன், இடைக்காலத் தன்னாட்சி சபைப் பிரேரணையை உருவாக்கிய விதமும் இதனைச் சமர்ப்பித்துத் தமிழர் தரப்பிற்கு எதிராகச் சதி செய்ய முயன்ற சக்திகள் அனைத்தினதும் திட்டங்களை அவை முன்னெடுத்துச் செல்ல முடியாதவண்ணம் தடைபோட்டுள்ளமையானது அவர் தனது இலட்சியத்தை அடைவதற்காக எந்தச் சக்தியையும் எதிர்க்கத் தயங்கப் போவதில்லை என்பதைச் சந்தேகம் எதுவுமின்றி எடுத்துக் காட்டுவதாகவே அமைந்துள்ளது.

தம்பி பிரபாகரனின் இலட்சிய உறுதி பற்றி நான் வியப்பதற்கான இறுதியான காரணம் அவரது எந்தவொரு புறச் சக்தியிலும் தங்கி வாழாக் கொள்கையாகும். plote,eprlf, telo ,epdp, போன்ற மற்றத் தமிழ்த் தீவிரவாத இயக்கங்கள் யாவும் வெவ்வேறு காலகட்டங்களில் இந்தியாவிலோ, சிறீலங்காவிலோ அல்லது வேறு வெளிநாட்டுச் சக்திகளிலோ தங்கிச் செயற்பட்டதாலேயே, இவை யாவும் இன்று கூலிக்கும்பல்களாக மாறும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. இவர்களும் ஆயுதப் போராட்டத்தில் குதித்த போது தம்பி பிரபாகரனின் அதே இலட்சியத்துடன்தான் களத்தில் இறங்கியவர்கள். ஆனால் அவர்கள் தம்பி பிரபாகரனைப்போன்று தாம் கொண்ட இலட்சியத்தில் உறுதியாகத் தளம்பாது நின்று பிடிக்க முடியாதுபோனதால்தான் இன்று கூலிக்கும்பல்களாகவும், எட்டப்பன் கூட்டங்களாகவும் செயற்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இது விடயத்தில் தம்பி பிரபாகரன் இளவயதில் யார் வழியைப் பின்பற்றினாரோ அதே சுபாஸ் சந்திரபோஸ் அவர்களும் பிரித்தானியர்களை இந்திய மண்ணிலிருந்து வெளியேற்ற புறச்சக்திகளை நம்பி எப்படி ஏமாற்றமடைந்தார் என்று வெகு அண்மையில் BBC வெளியிட்டுள்ள தகவல்களை நான் இங்கு குறிப்பிடாதிருக்க முடியாது. பிரித்தானிய உளவுத்துறை 1945ம் ஆண்டில் அறிந்து, 2021ம் ஆண்டு வரை வெளியிடுவதில்லை என்று ஒளித்து வைத்திருந்த இத்தகவல் இப்பொழுது 17 வருடங்கள் முன் கூட்டியே BBCக்குக் கிடைத்துள்ளது. இதன்படி சுபாஸ் சந்திரபோஸ் தனது இலட்சியத்தை அடைவதற்காகக் கள்ளமாக ஜேர்மனி நாட்டினுள் புகுந்து, hitlerன் உதவியை நாடி, அவர்வசம் இருந்த இந்திய போர்க்கைதிகளிலிருந்து திரட்டிய ‘free India legion’ எனும் 100, 000 இந்தியப் போர்வீரர்கள் கொண்ட படையென்றைப் பிரயோகித்து பிரித்தானிய ஆட்சியின் கீழிருந்த இந்தியாவை முற்றுகையிடுவதாகத் திட்டம் தீட்டப்பட்டது.

ஆனால் முதலில் hitler படைகள் சோவியத் யூனியனிற்குள் புகுந்தபோது விரக்தியடைந்த இடதுசாரிக் கொள்கை கொண்ட சுபாஸ் சந்திரபோஸ் அவர்கள், stalingarg சம்பவங்களின் பின்னர் பின்வாங்கி ஓடிக்கொண்டிருந்த hitler படைகளினுதவியுடன் தனது இலட்சியத்தை அடைய முடியாது என்பதை அப்பொழுது உணர்ந்து கொண்டார். இதனால் தான் திரட்டிய இந்தியப் படைக்கு துரோகம் இழைக்கும் விதத்தில் 1943ம் ஆண்டு februaryமாதம் யப்பானிற்குப் புறப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றில் சென்று விட்டார். இதன்பின்னர் தமது படைகளில் உள்ள இந்தியரை நம்பமுடியாது என்று பிரித்தானிய சாம்ராஜ்ஜியம் கருதி இந்தியாவிற்குச் சுதந்திரத்தை வழங்க முன்னதாகவே 1945ம் ஆண்டு சுபாஸ் சந்திரபோஸ் இறந்து விட்டதாக இந்தப் பிரித்தானியரால் இவ்வளவு காலமும் மறைத்து வைக்கப்பட்டிருந்த தகவல் தெரிவிக்கின்றது.

இதுபற்றித் தெரிந்தோ தெரியாமலோ, தம்பி பிரபாகரன் இதுவரை எந்தச் சக்தியினதும் துணையைப் பெறாமலோ எதிர்பாராமலோ இயங்கி வருவது அவர் தனது இலட்சியத்தில் கொண்டுள்ள உறுதியை மாத்திரமன்றி அவருக்கே உரித்தான தூரதிருஸ்டியாக விடயங்களை நோக்கும் திறமையையும் வெளிக்காட்டுகின்றது. இப்படியான ஒரு தலைவன் தமிழ் மக்களிற்கு இந்தக்காலகட்டத்தில் கிடைத்திருப்பதற்குத் தமிழ் மக்கள் கொடுத்து வைத்தவர்களென்றே கருதுகின்றேன். இந்த இலட்சியவாதியும், தியாகியும், உன்னத தளபதியுமாக விளங்கும் தம்பி பிரபாகரனின் வழிநடத்தலிலேயே எமது மக்களின் சுபீட்சம் அடையப்பட வேண்டும் என்பதே எனது அவாவாகும். இப்படியான எனது அன்பிற்கும், மதிப்பிற்குமுரிய தம்பி பிரபாகரனை நேரில் சந்திக்கச் சிறீலங்காவினுள் நான் பாதுகாப்பாக அடி எடுத்து வைக்கக்கூடிய நாள் விரைவில் மலரும் என்ற எதிர்பார்ப்புடன்தான் நான் நாட்களை எண்ணியவண்ணம் காத்திருக்கின்றேன். இந்தத் தலைவன் இன்று தன் பிறந்தநாள், பொன்விழாவைக் கண்டு உவகையுறும் வேளையில் இவர் ஆயுள் நூறும் கண்டு, ஈழத் தமிழ் மக்களோடு சாதாரண மானிடர் போன்று கலந்து வாழும் பாக்கியத்தை அதிவிரைவில் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கின்றேன்.

விரிவுரையாளர்,

அரசியல் ஆய்வாளர்,

அவுஸ்திரேலியா.

கலாநிதி விக்டர்

இராஜகுலேந்திரன்

(www.eelamalar.com)