கலியுகத்தில் அதிசயம் நிகழ்த்தும் வற்றாப்பளை கண்ணகி அம்மன்
பூகோளச்சுழற்சியில் வருடங்கள் கழிந்து பல யுகங்களை இந்தப்பூமி சத்தித்திருக்கின்றது. அந்த வகையில் தற்போது நடப்பது கலியுகம் என்பர். இந்தக் கலியுகத்தில் விஞ்ஞான வளர்ச்சியால் மெய்ஞ்ஞானம் நிராகரிக்கப்படுவதாக வாதிடுவோர் பலர் உண்டு. எனினும் இந்த யுகத்தில் இந்த தசாப்தத்திலும் கூட தன்னுடைய அற்புதங்களால் தனது உண்மையை உலகிற்கு எடுத்துக்காட்டிக் கொண்டிருக்கின்றாள் வற்றாப்பளைக் கண்ணகியம்மன். வற்றாப்பளையிலே கண்ணகி அம்மன் வந்தமர்ந்த வரலாற்றை வற்றாப்பளை கண்ணகியம்மன் வராற்றுச் சிந்து பின்வருமாறு எடுத்துரைக்கிறது:–
அரியதொரு வைகாசி விசாக பூரணையில்
அழகான மாட்டிடையர் கண்ணில் வெளிநின்றாய்
உள்ளபடி பசியதிக மென்றனுக் கென்றாய்
உற்றவன் தலைமீது பேனதிக மென்றாய்
பிள்ளைகளுமப்போது பிரியமுடனே தான்
பேரான தலையதனைப் பிளகாய் வகிர்ந்து
அழகான தலையதனை அவர்களும் பார்த்து
அங்கவர் கண் கண்டனரே ஆயிரம் கண்கள்
என்று வருகின்ற பாடலடிகள். உப்பு நீரில் விளக்கேற்றப்பட்டதை பின்வருமாறு கூறுகின்றன.
அன்னையே அமுதைப்படைத்து விட்டோமே
ஆன தோர் விளக்கவில்லை அந்தியுமாச்சே
என்று கூறக்கேட்டு இயம்பினாள் அம்மன்
நூலான திரிச்சீலை யொன்றைதனையிட்டு
நுவலரிய நீர்விளக்கேற்றினாரப்போ
நீரால் விளக்கெரியும் விந்தையது கண்டு
நின்றவர்கள் கிழவிதனையங்கு காணாமல்…
இவ்வாறு உலக மாதாவாகிய உமையம்மையார் கொடுங்கோலனாகிய பாண்டிய மன்னனை அழிக்க கண்ணகியாக அவதாரமெடுத்து அதர்மத்தை அழித்த பின் தானாக விரும்பி வந்தமர்ந்த இடமாக வற்றாப்பளை சிறப்புப் பெறுகின்றது. அன்னை வந்தமர்ந்த அந்த வைகாசி மாத விசாக நட்சத்திரமும் பூரணையும் கூடிய திங்கட்கிழமையில் தான் ஆண்டுதோறும் பொங்கல் உற்சவம் நடைபெறுகின்றது. அந்த வகையில் இவ்வருடமும் ஜூன் மாதம் முதலாம் திகதி இந்த உற்சவம் நடைபெறவுள்ளது. இந்த ஆலயத்தில் நடைபெற்ற அதிசயங்களை பின்வரும் பாடல் எடுத்துரைக்கிறது.
பண்டு பாலர்க்குக் காட்சி கொடுத்ததும்
பழைய வேப்பம் படவாள் தளிர்த்ததும்
வண்டு மேவு பனிச்சையதாடலும்
வன்பறங்கியைக் காயாலெறிந்ததும்
மொண்டு நீரில் விளக்கை யெரித்ததும்
மோது குட்ட ரோகந்தனைத் தீர்த்ததும்
கண்டு பற்றக்கள்ளன் கண் கவர்ந்ததும்
கருது சிற்பனுக்கே கண்களீய்ந்ததும்
அண்டர் போற்றுமுன் ஆயிரங்கண்களை
அன்று பிள்ளைகள் காணக் காண்பித்ததும்
விண்டெழுந்திரு வேப்பமரத்தினால்
மேவு பேய் பிணி போய் வுறத்தீர்த்ததும்
மண்டு மாமலை தன்னினைந்து நீ
மடங்க டோன்ற வரமளித்திட்டதும்
கொண்டு நந்திக்கடற்கரை கோயிலாய்
குலவு கண்ணகையற்புதங்கோடியே
இதில் ஆலயத்தில் திருடிய கள்வன் பார்வையிழந்தது 1972 இல். அதன்பின் நடந்த அற்புதங்கள் நிறைய உண்டு. 2004 இல் சுனாமி அனர்த்தத்தினால் தீர்த்தமெடுக்கும் கடற்கரையின் அடையாளம் சிதைந்து போனது. சரியான இடத்தை தேடிய பரிபாலன சபையினர்க்கு அலைகளை நிறுத்தி ஆழ் கடலில் இடத்தை அறியச்செய்த அற்புதம் நினைக்கும் போதே மெய்சிலிர்க்க வைக்கும் ஒன்று. அதுமட்டுமல்ல 2008இல் விஜயதசமி விழா நடந்துகொண்டிருந்த போது அம்மன் திருவூஞ்சலில் இருந்து வீழ்ந்து இடம்பெயர்வை குறியீடாகக் காட்டியதும் அதேபோல மீண்டும் மீள்குடியேற்றம் நிகழ்வதற்காக மக்களில்லா வேளையில் ஆலயத்தைப் பரிபாலித்த பாதுகாப்புப் படையினருக்கு காட்டிய அறிகுறிகளை நினைக்கும்போது மெய்சிலிர்க்க வைப்பவை.
இவ்வாறு கலியுகக் கண்ணகியாய் காட்சி தருகின்றாள் எங்கள் தாய். அவளை நம்பியவர்கள், தூயமனதுடன் பிரார்த்தித்தவர்கள் துன்பப்பட்டதாக வரலாறே கிடையாது. நம்பினால் நேர்வந்து வாய்பேசும் தெய்வம் அவள். இந்த வைகாசி விசாகப்பொங்கலில் சமுதாயத்தை அரித்தெடுக்கும் சமூக விரோதிகள் அழியவும் நல்லறம் தழைக்கவும் அவளைப் பிரார்த்திப்போம். அதர்மத்தை அழிப்பதற்காக அவள் காற்சிலம்பை கையிலெடுக்க பிரார்த்திப்போம்
க. ஜெயவீரசிங்கம்
(உப– தலைவர், ஆலய பரிபாலன சபை)