11ம் ஆண்டு நினைவு வணக்கநாள்– 20.02.2022
” தமிழினத்தின் தேசியத் தலைவரை இந்த உலகிற்கு தந்த “”
வேலுப்பிள்ளை பார்வதிப்பிள்ளை அம்மா.

வல்வையில் குழந்தையாய் 07.08.1931
வானுலகில் அன்னையாய் 20.02.2011

அன்னைபார்வதி…..பார்வதிப்பிள்ளை……பார்வதிஅம்மா……அண்ணரின் அம்மா அல்லது அண்ணையின் அம்மா என ஒன்றிற்கு மேற்பட்ட பெயர்களால் விழிக்கப்படும் வேலுப்பிள்ளை பார்வதிப்பிள்ளை என்னும் எண்பதுவயதான பெண்ணே பார்வதிஅம்மா ஆவார். வேலுப்பிள்ளை யின் மனைவி என்ற அறிமுகம் இவரது அடையாளம் அல்ல. அப்பெயர்; இவரை அறிமுகப்படுத்த போதுமானதாக இல்லை. ஆனால் இவரது பிள்ளைகளில் ஒருவரான ‘பிரபாகரனின் தாயார்’ என்ற அறிமுகமே உலகம் முழுக்க இவரை அடையாளம் காட்டிவிடும் சக்திவாய்ந்தது. ஏனெனில் உலகினை இயக்குவதாக பீற்றிக்கொள்ளும் உலக வல்லரசுகளே இத் தாயின்மைந்தனான ‘பிரபாகரன்’ என்னும் பெயரைக்கேட்டு மிரண்டு கொண்டதுடன் தனித்து நிற்கமுடியாமல் ஒன்றுடன்ஒன்று கூட்டுச்சேர்ந்து கொண்டு தமது குலை நடுக்கத்தை மறைத்துக்கொண்டமை உலகம் கண்டுகொண்ட உண்மையாகும்.

மேற்படி பெருமைபெற்ற மைந்தனைப்பெற்ற பார்வதிஅம்மா வல்வெட்டித்துறை கொத்தியால் ஒழுங்கையில் வாழ்ந்த வல்லிபுரம் சின்னம்மா தம்பதிகளின் புதல்வி யாவார். வல்லிபுரம் பருத்தித்துறை யைச் சேர்ந்த சம்பானோட்டிக்கரையார் எனப் புகழ்பெற்றவரும் ‘மெத்தைவீட்டு’ நாகலிங்கம் என அழைக்கப்பட்ட ‘தெய்வர் நாக லிங்கத்தின்’ மைந்தனாவார். நாகலிங்கம் ஆங்கிலேயஅரசினால் ‘முதலியார்’ பட்டம் பெற்ற பெருமைக்குரிய கப்பல்உரிமையாளர் மட்டுமன்றி பலகப்பல்கள் மற்றும் பெரும்நிலபுலம்களிற்கு சொந்தக்காரரானவர். இவர் தனதுபேத்தியான பார்வதியம்மா பிறப்பதற்கு முன்னரே 26 நவம்பர் 1909ஆம் ஆண்டில் மறைந்து விட்டாh.(Notes On Jaffna(1920) page91) பார்வதியம்மாவின் புகழ்பெற்ற மைந்தனான மேதகு பிரபாகரனின் பிறந்தநாள் 26 நவம்பர் 1956 என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. என்னே அதிசயஒற்றுமை. வரலாறுகள் திரும்பும்போது விருட்சமாகின்றனவா?

வல்லிபுரம் சின்னம்மா தம்பதியினருக்கு பார்வதியம்மாவிற்கு முன் பிறந்த பெண்குழந்தை ஒன்று மலேசியாவில் சிறுவயதில் காலமானது. இதனால் இரண்டாம் முறையாக ‘சின்னம்மா’ கற்பமுற்றதும் சின்னம்மா வின் தாயார் மகளான சின்னம்மாவை வல்வெட்டித்துறைக்கு அழைத்து தன்னுடன் வைத்திருந்து பத்தியம் பார்த்தகாலத்தில் பிறந்தவரே பார்வதிஅம்மா ஆவார். இவரிற்கு ஐந்துவருடங்கள் பின்பாக பிறந்தவரே இவரின்தம்பி வேலுப்பிள்ளை. பார்வதிஅம்மாவின் வீட்டுப்பெயர்’குயில்’ என்பதாகும். இவர் வல்வெட்டித்துறையின் பழம்பெருமைமிக்க திண்ணைப் பள்ளிக்கூடமானதும் பின்னாட்களில் அமெரிக்கன் மிஸன் தமிழ்கலவன் ஆரம்ப பாடசாலை என அழைக்கப்பட்ட அரியகுட்டிப் பாடசாலையில் தனது ஆரம்பக் கல்வியை கற்றுக் கொண்டார். 7 ஆவணி 1931 இல் பிறந்த இவர் தனது பதினாறாவது வயதில் வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கையில் வாழ்ந்து வந்த வல்வெட்டித் துறையின் முதன்மைக் குடியானதும் பாரம்பரியபெருமை மிக்கதுமான திருமேனியார்; குடும்ப வழித்தோன்றலும் ‘அக்கிரகாரத்துத்தம்பி’ என அழைக் கப்பட்டவரான திருவேங்கடம் வேலுப்பிள்ளையை தனது வாழ்க்கைத்துணையாகக் கொண்டார்.

இங்கு கூறப்படும் திருவேங்கடம் மற்றும் இவரது தந்தையாரான வல்லிபுரம் என்போர்கள் மலேசியாவில் இருந்து ஊருக்கு திரும்பிவந்து வாழ்ந்து கொண்டிருந்தவர்கள். அத்துடன் ஆரம்பத்தில் கொத்தியால் ஒழுங்கையிலேயே அருகருகான வீடுகளில் வாழ்ந்தவர்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது இதனால் உறவு முறையாலும் ஏற்கனவே நன்கு அறிமுகமான இரண்டு குடும்பங்கள் மற்றும் ஊராரின் நல்ஆசியுடனும் இவரது இல்லறவாழ்வு இனிதே ஆரம்பமாயிற்று.
வேலுப்பிள்ளையின் காதல்மனைவியாக வாழ்ந்த இவர் 9.3.1948இல் மனோகரன் என்னும் மகனைப் பெற்றதன் மூலம் இனியதாயாகவும் மாற்றமடைந்தார்;. காலவேட்டத்தில் மனோகரனைத் தொடர்ந்து ஜெகதீஸ்வரி, வினோதினி என்றும் இரண்டுபெண் குழந்தைகளையும் பெற்றெடுத்தார். இந்நிலையில் கணவரான வேலுப் பிள்ளையின் கடமை நிமிர்த்தம் 1953ம் ஆண்டு செப்ரம்பரில் அநுராதபுரத்தில் இவரது குடும்பவாழ்க்கை ஆரம்பமாயிற்று. இலங்கையின் புராதனநகரான அநுராதபுரமே முதலாவது தமிழ்அரசர்களான சேனன் குத்திகன் என்பவர் களினால் ஆளப்பட்ட வரலாற்றுப் பெருமைமிக்கது.

அத்துடன் அரசன் என்பதற்கு இலக்கணமாக வாழ்ந்து காட்டிய எல்லாளன் எனப்படும் ஈழாளன்(ஈழத்தை ஆண்டதனால் ஈழாழன் என்ற காரணப்பெயரால் அழைக்கப்பட்ட இவரின் பெயர் காலவோட் டத்தில் எல்லாளன் என மாற்றமடைந்து காணப்படுகின்றது) நாற்பத்துநான்கு ஆண்டுகள் செங்கோலோச்சிய புனித பூமி யாகவும் வரலாற்றில் இப்பிரதேசம் காணப்படுகிறது. இவ்வாறான சிறப்புமிக்க அநுராதபுரத்தில் கிறிஸ்து விற்கு முன் 101 ஆண்டளவில் ஈழாளனின் நினைவாக கட்டப்பட்ட சேதியமான ஈழாளனின் நினைவுத்தூபி அமைந்திருந்த Elala Sona (sona என்பது பாளி மற்றும் சமஸ்கிருத மொழிகளில் ‘அருகாமை’ எனப்பொருள்படும்) என்னும் பகுதியிலேயே வேலுப்பிள்ளைக்குரிய அரசாங்க உத்தியோகஸ்தர் தங்கும் விடுதியும் அமைந்திருந்தது.

மகாவிகாரை என அழைக்கப்படும் ருவான் வெலிசாயா தாது கோபத்திற்கு அண்மையில் A12 வீதி என அழைக்கப்படும் அநுராதபுரம் புத்தளம் வீதி மற்றும் A28 வீதி என அழைக்கப்படும் அநுராதபுரம் குருநாகல் வீதி என்பன ஆரம்பிக்கின்றது. இக் குருநாகல்வீதியில் தெற்குநோக்கிச் செல்லும் போது கால்மைல் தூரத்திற்குள் சிற்றம்பலம் தியேட்டரை அடுத்து காணப்பட்ட இடமே Elala sona எனப்படும் பிரதேசமாகும். இவ்வீதியின் வலதுபுறமாக அமைந்திருந்ததே Elala Tomb என்றழைக்கப்படும் ஈழாளனின் நினைவுத் தூபியாகும். இத்தூபியின் வடக்குப்புறமாக ஆரம்பமாகும் தக்குணதகோபாவீதி என இன்றழைக்கப்படும் வீதி யொன்று A12 வீதியான புத்தளம்வீதியுடன் சென்று இணைகின்றது. இவ்வீதியில் குருநாகல் அனுரதபுரவீதிக்கு அண்மையில் அமைந் திருந்த அரசாங்கஊழியர்;கள் மற்றும் மருத்துவர்களிற்கான விடுதிகளி லொன்றிலேயே வேலுப்பிள்ளை அப்பாவிற்கான விடுதியும் அமைந்திருந்தது. தமிழர்களின் கட்டுப்பாட்டிற்குள் இருந்த அப்பிரதேசம் அநுராதபுரத்தின் நகர முதல்வராக இருந்த தமிழரான சிற்றம்பலத்திற்கும் பண்டாரநாயக்கா விற்கும் ஏற்ப்பட்ட மோதலையடுத்து பண்டாரநாயக்காவின் அரசாட்சிக்காலத்தில் புனிதநகராக்கப்பட்டு தமிழ்மக்களின் குடியிருப்புகள் திட்ட மிட்டு அங்கிருந்து அகற்றப்பட்டன. 1958கலவரத்துடன் தமிழர்களினால் முற்று முழுதாக கைவிடப்பட்ட அப்பிரதேசம் இன்று காடுமண்டிய அடையாளம் தெரியாத பூமியாகிவிட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மேற்படிவிடுதியில் மூன்றுகுழந்தைகளுடன் இனியவாழ்க்கையைத் தொடங்கிய பார்வதிஅம்மா மிகவும் சந்தோசமாக அக்காலத்தைக் களித்திருந்தார்;. வீட்டு வேலைகளை முடித்து விட்டு காத்திருக்கும் இவரும் வேலைமுடிந்து பிற்பகலில் வீடுதிரும்பும் வேலுப்பிள்ளையும் குடும்பசமோதரராக தமது விடுதியின் முன் அமைந் திருந்த ஈழாளனின் நினைவுத்தூபியுடன் அமைந்திருந்த புல்வெளியில் அமர்ந்து தமது மாலை நேரங்களைக் கழித்திருப்பர். ஐந்துவயதான மனோகரனும் நாலு வயதான ஜெகதீஸ்வரியும் ஓடியாடி விளையாடும் போது கைக்குழந்தையான வினோதினி தாயின்மடியிலும் தந்தையின் மடியிலும் மாறிமாறி தவழ்ந்த வண்ணமிருப்பார்.

ஈழாளனின் நினைவுத்தூபியின் எதிரே அமைந்திருந்த இவர்களின் தங்கும்விடுதி, நினைவுத்தூபியின் அடியில் கழிக்கும் மாலை நேரங்கள். இவை எல்லாம் இருபத்திரண்டு வயதுடைய இளம்தாயான பார்வதி அம்மாவின் பார்வையில் தினம்தினம் தெரிவதும் ஈழாளனின் வீரதீரக்கதைகளைக் கேட்பதுமாக இவரது உள்ளுணர்வுகள் ஈழாளனையே(எல்லாளன்) சுற்றிச்சுழன்று உவகைகொள்ளும் வேளையிலேயே புதியகரு இவரின் வயிற்றில் உருவானது.

1954ம் ஆண்டு ஆரம்பமாதங்களில் உருவாகிய அக்கருவே 2011ம் ஆண்டு ஆரம்பமாதங்களில் இக்கட்டுரையை எழுத எனக்கு ஏதுவானது. அக்கருவே 1954 கார்த்திகை 26ம் திகதி இணுவில் மகப்பேற்று நிலையத்தில் பிரபாகரன் என்னும் தெய்வீகக் குழந்தையாக ஜனனமானது. ஈழாளனின் நினைவில் பிறந்த அக்குழந்தைக்கு என்னபெயர்; வைக்கலாம் எனக்குடும்பத்தினர்; சிந்தித்தபோது தந்தையார்; வேலுப் பிள்ளை சிவனையும் விஸ்ணுவையும் இணைத்து மூத்தமைந்தனின் மனோகரன் என்னும் பெயரின் தொடராக அரிகரன் என பெயரைக்கூறினார்;. குழந்தையின் தாய்மாமன் வேலுப்பிள்iயோ சூரியதேவனின் பெயரான ‘பிரபாகரன்’ எனப் பெயரைச் சூட்டினார்.

பார்வதியம்மாவின் தந்தையாரான வல்லிபுரம் போல் தோற்ற மளித்த அக்குழந்தையினை தாய்வழிப்பேத்தியான சின்னம்மா தனது கணவரின் அழைபெயரான ‘துரை’ என கொஞ்சலாக அழைக்கமுற்பட்டார் அதுவே அக்குழந்தையின் வீட்டுப் பெயராக மாற்றமடைந்தது. மனோகரன், பிரபாகரன் என்னும் இனிய சந்தங்களினால் இணையும் பெயர்கொண்ட குழந்தைகளுடன் முன்கூறிய ஜெகதீஸ்வரி மற்றும் வினேதினி என்னும் பெண்குழந்தைகளுடனும் மேலும் பதினொருமாதங்கள் அநுரதபுரத்தின் ஏலாளசோணாவில் இவர் வாழ்ந்திருந்தார். 1955ஒக்டோபர் மாதம் கணவரான வேலுப்பிள்ளை உத்தியோக இடமாற்றம் காரண மாக புத்தளத்திற்கு மாற்றலாகிச் சென்றார்.

அக்காலத்தில் ஒருவயது பிரபாகரன் மற்றும் மூன்று குழந்தைகளுடனும் தாயார் சின்னம்மா சகோதரன் வேலுப்பிள்ளை என்பவர்களுடன் கூட்டுக்குடும்பமாக வல்வெட்டித்துறை ஆலடியில் பார்வதி அம்மாவின் வாழ்கை இனிதாகத் தொடர்ந்தது. விடுமுறை நாட்களில் வீட்டிற்கு வரும் கணவர் வேலுப்பிள்ளை எப்பொழுதும் குறும்புசெய்யும் குழந்தை பிரபாகரன் மற்றும் குழந்தைகளும் வீட்டு வேலைகளினை முன்னெடுத்துச் செய்யும் அன்னையாரும் என பார்வதிஅம்மாவின் அக்காலம் மிகஇனிமையானது.

1958இல்; வேலுப்பிள்ளை அப்பாவிற்கு மட்டக்களப்பிற்கு மாற்றம் கிடைத்தது. மீண்டும் குடும்பத்துடன் பார்வதியம்மா மட்டக்களப்பில் குடியேறினார். தாமைரைக்கேணி குறுக்குவீதீயில் 7ம் இலக்க வீட்டில் நான்குவயது பிரபாகரனுடன் பார்வதிஅம்மா குடிபுகுந்தார். இக்காலத்தில் தமதுவீட்டின் பின்புறம் குடியிருந்த ஆசிரியையான இராசம்மா என்பவருடன் மிகவும் நட்பாகப்பழக ஆரம்பித்தார்;. வெலிமடை அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையின் ஆசிரியையாக பணியாற்றியவர் இராசம்மா என்ற அன்னப்பாக்கியம் ஆவார்.

அதே பாடசாலையில் பணியாற்றியவர்; இவரதுகணவரான அரியக்குட்டி செல்லத்துரை ஆசிரியராவார். இவர் மட்டக்களப்பு ஆரையம்பதி 2ம்குறுக்குவீதியை பிறப்பிடமாகக் கொண்டவர். தாமரைக்கேணியைச் சேர்ந்த நல்லையா முதலியாரின் மகளான இராசம்மா என்ற அன்னம்மாவை மணமுடித்து தாமரைக்கேணியை தமது வாழ்விடமாகக் கொண்டிருந்தார்.
குழந்தையான பிரபாகரன் வளரும் பருவத்திலேயே இராசம்மாவுடனான பார்வதி அம்மாவின் அன்பானநட்பும் வளர்ந்து கொண்டது. இந்நிலையிலேயே 1958ம்ஆண்டு மே 25ந் திகதி மட்டக்களப்பு பதுளைவீதீயில் தொடங்கிய இனக்கலவரம் நாடளாவிய ரீதியில் தமிழினப்படுகொலையாக மாற்ற மடைந்து. இலங்கையின் இனக்குழும வரலாற்றில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்திய இக்கலவரம் நடைபெற்று 57 வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் அதன் பாதிப்புக்கள் இன்றுவரை தொடரவே செய்கின்றன. ‘பண்டாரநாயக்கா அரசாங்கம்’ தமது அதிகாரத்தினால் கட்டுப்படுத்த அல்லது தடுத்து நிறுத்த மறுத்ததனால் பாரிய பின் விளைவுகளை ஏற்படுத்திய இக்கலவரத்தின் ஆரம்பம் நிச்சயமாக இனப்பகையல்ல.

1958ம் ஆண்டில் நுவரெலியாவின் முன்னால் மேயரான செனிவிரட்ணா என்பவர்; தமது பதவியை கைவிட்டுவிட்டு மட்டக்களப்பில் தென்னந்தோட்டம் ஒன்றைக் கொள்வனவு செய்து அங்கேயே வாழ்ந்துவந்தார். அக்காலத்தில் அங்கிருந்த உள் ளூர்ப் பெண்ணொருத்தியுடன் இவருக்கு தகாதஒழுக்கம் உருவாயிற்று. இதனால் இவர்;மீது பகமைகொண்ட அப்பெண்னின் கணவர்; 25 மே 1958 இல் செனி விரெட்ணாவை சுட்டுக்கொன்றுவிட்டார்;. 26 மே 1958 இல் இவரது உடலை பதுளை வீதிவழியாக நுவரெலியாவிற்கு எடுத்துச்செல்லும் பாதையிலேயே ‘சிங்களவனை தமிழன் கொன்றுவிட்டான்’ எனப் பரவியசெய்தி தமிழர்களுக்கு எதிரான பாரிய இனப்படுகொலையாக மாற்றமடைந்தது.

இக்காலத்தில் 27 மே 1958 இல் செவ்வாய்க்கிழமை வெலிமடையில் இருந்து பதுளைவழியாக மட்டக்களப்பிற்கு தனது நண்பர்களான வேலுச்சாமி மற்றும் தங்கவேல் என்பவர்களுடன்; திரும்பிக் கொண்டிருந்த செல்லத்துரை ஆசிரியர் ‘மகாஓயா’ என்ற இடத்தில் சிங்கள இனவெறியரால் கொல்லப்பட்டார்;. இதன்பின் எப்படியே மட்டக்களப்புக்கு தப்பிவந்த ஆசிரியையான இராசம்மா மட்டக்களப் பிலேயே தனது ஆசிரியத்தொழிலில் தொடர்ந்துஈடுபட்டார். இதனால் பார்வதிஅம்மா மற்றும் இராசம்மாவின் அந்நியோன்னியம் அதிகமாகியது.

அதேவேளை கணவனை இழந்ததனால் பலசிக்கல்களை எதிர்நோக்கிய இராசம்மாவின் கதைகளை அமைதியாகச் செவிமடுத்து அவருக்கு ஆறுதல்கூறி உதவிகள் புரிவதில் பார்வதியம்மா நிறைவடைவார்;. இராசம்மா என்னும் அப்பெண்னின் கதைகளை தாயுடன் இருந்து சிறுவன் பிரபாகரனும் கேட்பார். இவ்வாறே அவரின் சிறுவயதில் இராசம்மாவினாலும் தாயாரான பார்வதிஅம்மாவாலும் விதைக்கப்பட்ட இவ்விதைகளே அநாதரவான நிலையில் சிங்களஇனத்தினரால் படுகொலை செய்யப்படும் ஈழத் தமிழர்களக்கு சிங்களஇனத்திடம் இருந்து சலுகைகள் பெறுவதைவிட விடுதலைபெறுவதே தீர்வாகலாம் என்னும் உணர்வு அவரின்மனதில் மையம்கொள்ள காரணமாயிற்று. (தினக் குரல் வாரஇதழ் 26நவம்பர் 2004)

மட்டக்களப்பில் பார்வதிஅம்மாவுடன் சிறுவன் பிரபாகரன் வாழ்ந்த இக்காலத்தில் அவரிடம் குடிகொண்ட இவ்விடுதலை உணர்வே பின்னாட்களில் ஈழத்தமிழருக்கான தனிநாட்டிற்காக அவரை போராடத்தூண்டியது. இதனையே அவர்; 1984 பங்குனி மாதம் 11 மற்றும் 17ந்திகதிகளில் வெளிவந்த இந்தியாவின் SunDay ஆங்கில வாரஇதழுக்கு ‘அனிதாபிரதாப்’ என்ற செய்தியாளரின் இரண்டாவதுகேள்விக்கு பதிலாகக் கூறியிருந்தார். குறிப்பிட்ட இச்செவ்வி 46 கேள்விகளைக் கொணடிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இவ்வகையில் தாயைப்போலவே மற்றவர்களின் உரையாடலை ஆழ்ந்து செவிமடுக்கும் தனயனாக சிறுவயதிலேயே தலைவர் பிரபாகரன் உருவெடுத்தார். அத்துடன் விதவைத்தாயான இராசம்மா போல் மேலும் ஈழத்தமிழ்த்தாய்மார்; கண்ணீர்; விடக்கூடாது அவர்களிற்காக தன்னாலான ஏதாவது உதவிகளை செய்யவேண்டும் என்ற உணர்வுடன் செயற்பட்ட தாயான பார்வதிஅம்மாவின் உணர்வுகளும் செயல்களும் அவ்வாறே மகனான பிரபாகரனையும் உந்தித்தள்ளி செயற்படத்தூண்டின என்றால் மிகையல்ல.

சிறுவன் பிரபாகரனின் மனதில் இத்தகைய உணர்வுகள் கனன்று கொண்டிருந்த காலமான 1963இல் பார்வதிஅம்மா சொந்தஊரான வல்வெட்டித்துறைக்கு திரும்பி யிருந்தார். வல்வெட்டித்துறை ஆலடிப்பகுதியில் அமைந்திருந்து அண்மையில் நிர்மூலமாக்கப்பட்டு கற்குவியலாக காணப்படும் வீட்டிலேயே இவரின் வாழ்கை தொடர்ந்தது. பார்வதியம்மா வின் மூத்தமகளான ஜெகதீஸ்வரியின் பெயரில் அமைக்கப் பட்ட இவ்வீடு ‘ஈஸ்வரி வாசா’ என்னும் பெயர் கொண்டதாகும். வல்வெட்டித்துறைக்கு வந்த நாள்முதல் சாதாரண சிறுவர்கள் போல் காணப்பட்ட பிரபாகரனின் நாளாந்த செயற்பாடுகள்.

அவரின் பதினான்காவதுவயதில் மாற்ற மடைந்ததை முதலில் கண்டுபிடித்தும் பார்வதிஅம்மாவே ஆவார்;. 1968ம் ஆண்டில் சிறுசிறுபோத்தல்கள் மற்றும் பால்ப்பேணிகளை எங்கிருந்தோ கொண்டுவந்து அவற்றைச் சுத்தப்படுத்தி காயவைப்பதும் பின்னர் அதனை எடுத்துச்செல்வதையும் கண்ட பார்வதி அம்மாவிற்கு ஏனென்ற காரணம் புரியவில்லை. எனினும் தொடர்ந்த நாட்களில் தீவிரவாதப்போக்குடைய சின்னச்சோதி, மற்றும் நடேசுதாசன் என்பவர்களுடன் மகனிற்கு ஏற்ப்பட்டி ருந்த தொடர்பைப் தெரிந்துகொண்டார். இதனை உறுதிப்படுத்து வது போல் சின்னச்சோதி நடேசுதாசன் மற்றும் அவர்களை யொத்த நண்பர்களும் பிரபாகரனைத்தேடி வீட்டிற்கு வருவதும் அவரை அழைத்துச்செல்வதும் அவருடைய சந்தேகத்தை அதிகரிக்க காரணமாகியது. வவுனியா கச்சேரியில் பணிபுரியும் கணவன் சனி ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் வீட்டில் நிற்கும் போது அவருடன் அன்பொழுக ஒட்டிஉறவாடும் மகன் ஏனைய நாட்களில் வீட்டில் நிற்பதை தவிர்ப்பதும் இவர் மனதில் மேலும் பல கேள்விகளை உருவாக்கியது. இதனைவிட மூத்தமகன் மனோகரனின் வகுப்புத்தோழர்களான குட்டிமணி சின்னச்சோதி போன்றோருடனான வயதுக்க மீறிய தொடர்பும் அன்னை பார்வதி அம்மாவின் கேள்விகளுக்கு மேலும் விடைகூறின.

எப்பொழுதும் தம்பியின் நடவடிக்கைகளை பாசத்துடன் கண்காணித்து வந்த பொறுப்புள்ள சகோதரரான மனோகரன் கூறும் செய்திகளும் இவரின் சந்தேகத்தை உறுதிப்படுத்தின. இந்நிலையிலேயே 1969இல் எழுச்சிபெற்ற ‘தமிழரின் சுயாட்சி’ என்னும் கோசத்துடன் மகனும் ஐக்கியமாகிவிட்டதை பார்;வதிஅம்மா புரிந்து கொண்டார். மேற்படி மகனின் எண்ணங்களும் செயல்களும் இவருக்கு ஆச்சரியமளித்தன. போலித்தனமான அரசியல் அபிலாசைகளை வெறுத்து எந்த அரசியல் கட்சிக்கும் எப்பொழுதுமே வாக்களிக்காமல் கடமை யை மட்டுமே கண்ணாகக் கருதும் உண்மையான அரசாங்க ஊழியரான வேலுப்பிள்ளைக்கு இப்படியொரு மகனா ? இதனை எப்படிக் கணவரிடம் கூறுவது? காலங்கள்கழிந்தன. மகனிடம் மாற்றமில்லை. 1970 பொதுத்தேர்தலின் பின் சுயாட்சியும் தமிழரின்ஒற்றுமைக்குள் ஒன்றாகிய அதேவேளையில் வல்வெட்டித்துறையில் ஏற்பட்ட கூட்டணி அலையுடன் ‘தமிழரின்விடுதலைக்கு தமிழீழமேதீர்வு’ என்ற அரசியல் விழிப்புணர்வும் அந்த மண்ணில் வளரஆரம்பித்தது. பெரிய தந்தையார் சண்முகம்பிள்ளை ஞானமூர்த்தி வீட்டில் கூட்டணியாகக்கூடும் கூட்டங்களுடன் மகனும் ஐக்கியமாகி விட்டதனை அறிந்துகொண்டார். படிக்கவேண்டிய வயதில் எதற்காக இப்படி செல்லமகனின் சிந்தனையில் மாற்றம் வராதா?

1970 டிசம்பரர் மாதம் நடைபெற்ற க.பொ.த சாதாரண பரீட்சையில் தேற்றியபின் மகனின் செயல்களில் மேலும் வேகம்கூடியது. 1971 ஜனவரியில் வேம்படியில் கட்டப்பட் டிருந்த அன்றைய கல்விஅமைச்சரான பதியுதீன்முகமட்டின் கொடும் பாவி யில் காணப்பட்டது காக்கிநிறக்காற்சட்டை கேள்விப்பட்டவுடன் தேடிப்பார்த்தார் தங்கள்வீட்டில் இருந்ததே. சுதந்திரகாலம் முதல் வல்வெட்டித்துறையில் எப்பொழுதும் காணப்பட்ட அரசஎதிர்ப்புணர்வும் 1970 பொதுத்தேர்தலின் பின் இலங்கை அரசியலில் ஏற்பட்டமாற்றங்களும் தமிழ்மாணவர் மீதான தரப்படுத்தலும் தனது மகனிலும் மாற்றங்களை ஏற்ப் படுத்தியதைப் புரிந்துகொண்டார். மூத்தவன் மனோகரனுடன் இணைந்து ஓய்வுநாளில் வீட்டிற்குவந்த கணவனிடம் விளக்கமாகக் கூறினார்.

தமிழருக்கான அரசியல் சித்தாந்தங்களுடன் விளங்கிய தமிழர்கூட்டணி ஸ்தாபகர் ஞானமூர்த்திஅப்பா வீட்டில் 1971 மார்ச் மாதமளவில் பிரபாகரனைக் கண்டு கொண்ட தந்தையிடம் ‘என்னை என்வழியில் விட்டுவிடுங்கள். நான் தமிழ் இனத்திற்காக போராடப்போகின்றேன்’ எனக்கூறிய மகனிற்காக தாய்மனம் வேதனைப்பட்டது. சிறுவன் விபரம் புரியாமல் விளையாட்டுத்தனமாக கூறினானா? ஏது செய்யலாம்? ஆனால் தொடர்ந்த நாட்களில் மகனின் கையில் இருந்த மோதிரமும் வீட்டில் இருந்த காப்பும் காணாமல்ப்போயின. ஆயுதம் வாங்க அலைந்த மகனின் செயல்கள் மேலும் வியப்பை அளித்தன. வவுனியாவில் தந்தையுடன் தங்கியிருந்த மகன் பாடசாலைக்கும் செல்லாமல் தந்தையிடமும் கூறாமல் 1971 செப்டெம்பரில் ஊருக்கு திரும்பிவந்தது. பொறுக்கமுடியாமல் ஒருநாள் மகனிடம் நேரடியாகவே கேட்டார்? நாலு மொட்டையர்களுடன் இணைந்து உன்னால் என்ன செய்யமுடியும்? நாலுமொட்டை நாளைக்கு நாற்பது மொட்டையாகும். நாற்பது மொட்டையும் பின்னர் நானூறு மொட்டையாகும். சிரித்துக்கொண்டெ மகன் கூறியது அன்னையை சிந்திக்கதூண்டியது. மகனை மாற்றமுடியாது. மகனின் உறுதியில் முடிவுகண்டார். மகன் வீட்டிற்கு வருவது குறைந்தது. மீண்டும் ஒருநாள் அவன் வந்தபோது காலில் எரிகாயம் அம்மாவின் மனது துடித்தது. ஆனாலும் அது மகனிற் குள் எரிந்து கொண்டிருக்கும் அந்தவேட்கை. தமிழினத்தின் விடுதலையில் மகன் கொண்டிருக்கும் காதலின் அடையாளம் என முடிவுசெய்தார். மகனை அவன் வழியில் விட்டு விடுவோம்.

விளைவு 1973 மார்ச் மாதம் 22ந் திகதி பகலில் மகனைத்தேடி பொலிசாருடன் வந்த பெயர்தெரியாத நண்பனும் (சிறிசபாரத் தினம்) 23ந்திகதி அதி காலை வீட்டைச் சல்லடை போட்டுத் தேடிய சி.ஐ.டி பொலிஸ்அதிகாரியான பஸ்தியாம்பிள்ளை குழுவினரும் தனது ஆசைமகனைத்தான் தேடிவந்தனர். புரிந்து கொண்டார்! மகன் இனிமேல் எப்பொழுதும்வீட்டில் உறங்க முடியாது. அதுசரி இரவு சினிமா பார்த்துவிட்டு உறங்கச்சென்ற மகன் அதிகாலை பஸ்தியாம்பிள்ளை வந்தபோது எங்கே போனான்? எப்படிப்போனான் மனது அலைபாய்ந்தது. அன்று முதல் மகன் வீட்டிற்கு வரவில்லை. ஆனால் பொலிசார் அடிக்கடி வந்தார்கள். அவர்கள் இவ்வாறு வருவது பார்வதி அம்மாவிற்கு பிடித்திருந்தது. காரணம் மகனைப்பிடிக்க முடியாது அவர்கள் தவிக்கின்றனர். பெருமிதம் கொண்ட மனதுடன் வருபவர்களை எதிர் கொள்ளத்தயாரானார். நாட்கள்நகர்ந்தன. நாற்பத்திரண்டு நாட்களின் பின் அலை கடலை தாண்டிவிட்டான் மகனென்ற சேதிவந்தது மகனுடன் சென்று வேதாரணியத்தில் விட்டுவிட்டு வந்த ‘மோகன்’ இற்கு மனதாலே நன்றிசொன்னார் அமைதி கொண்டார். மகனிற்கு இனி ஆபத்தில்லை ஆனால் பஸ்தியாம்பிள்ளையும் அவன் பரிவாரங்களும் தொடர்ந்து வந்தார்கள் தொல்லை கொடுத்தார்கள். பார்வதிஅம்மா பயப்படவில்லை. ஏனெனில் மகனில் இருக்கும் பயத்தினால்த்தானே அவர்கள் வருகின்றார்கள். பயத்தினால் வருபவர்களைப்பார்த்து பயங்கொள்ளலாமா?.
1975 சித்திரை மாதத்தில் தம்பி வேலுப்பிள்ளை கூறினார். உனது மகன் யாழ்ப்பாணத்தில் நிற்கின்றான். துள்ளிக்குதிக்கும் சந்தோசத்தில் மகனைப்பார்கத் துடித்தார். ஆனால் மகன் இப்பொழுதும் வீட்டிற்கு வரவில்லை ஆடிமாதம் வந்தது மாதம் முடியுமுன்னே துரையப்பாகொலை என்ற சேதியுடன் வந்தது ஆவணிமாதம் வந்தது. பஸ்தியாம்பிள்ளை பயங்கரகோபத்தில் அடிக்கடிவந்தார். எங்கே உனது பிள்ளை? கேள்வியும் அவரேகேட்பார். எப்படியும் பிடித்துக்காட்டுகின்றேன் பார்! பதிலும் அவரேதருவார். இப்பொழுது தாமோதரம்பிள்ளையும் வரத்தொடங்கினார். வாலிபனான மகன் தமிழரின் நல்வாழ் விற்காக தனதுவழியில் நடக்கத் தொடங்கி விட்டான். மகனிற்காக மனது பிரார்திற்கத்தொடங்கியது. செல்லுமிடமெல்லாம் கோயில்களில் மகனிற்காக அர்சனை. தனக்காக எதையும் வேண்டாது மகனிற்காக வேண்டுவதே தாயுள்ளம். அதன் அடையாளம் பார்வதிஅம்மாவின் செயல்களே.

துரையப்பாவில் தொடங்கியது துரிதமாக வளர்ந்தது. எங்கும் ‘புதியபுலிகள்’ பற்றிமக்கள் பேசத்தொடங்கினர். யாழ்ப்பாணத்தில் துரையப்பா கொழும்பில் கனகரட்ணம். தமிழினத்து ரோகிகளிற்கு தொடரானபரிசுகள். அரண்டுபோனது சிங்கள அரசு. பஸ்தியாம்பிள்ளைக்கு புதியபொறுப்பு. பார்வதிஅம்மாவின் பிள்ளையை வேட்டையாட வெறிகொண்டு அலைந்தார். அடிக்கடி ஆலடிவீட்டிற்கு வந்து மிரட்டிப் பார்த்தார். வாசல்படி யிலே இருந்து பவ்வியமாகவும் கேட்பார். எப்படியோ ஒருநாள் அவரும் வேட்டையாடப்பட்டார். விடுதலைப்புலிகள் வெளிச் சத்திற்கு வந்தனர்;.
சிறுவன் பிரபாகரன் ஏறி விளையாடிய ‘உயிரற்ற புலிப் பொம்மை’ பார்வதி அம்மாவின் வீட்டிற்குள் பலவருடங்களாக அசைவின்றியே நின்றிருந்தது. எப்படியோ வெளியில் வந்து வல்வெட்டித்துறை பொலிஸ்நிலையத்திற்குள் சென்றது. ஆரிய பாலாவிற்கும் அதனோடு விளையாட ஆசைபோலும். விடுதலைப் புலிகளின் உயிராய் இருந்த பிரபாகரனைப் பிடிப்பதற்குப்பதிலாக அவருடைய விளையாட்டுப்புலியை பிடித்ததில் ஆரியபாலாவிற்கு ஏதோபெருமை. வல்வெட்டித் துறைக்கு வந்த நாள் முதலாய் அவரும் அடிக்கடி வரத்தொடங்கினார். பொறுப்பதிகாரி அல்லவா? மேலிடத்துக்கட்டளை எதுவோ? ஆனால் மென்மையாகக்கதைப்பார். அதிலே மிரட்டலும் இருக்கும். பதகளிப்பில்லா பார்வதிஅம்மாவிற்கு இவைகள் பழகிப்போன விடயங்கள். அதனால் வாசல்படியில் நின்றே பதிலைக்கொடுப்பார்;. எத்தனை நாள்தான் இப்படி நடக்கும். ஒருநாள் ஆரியபாலாவால் அழைத்துச் செல்லப் பட்டார். பார்வதி அம்மாவீட்டினில் வெடிமருந்து இருந்ததாக குற்றச்சாட்டு மறுநாள் வரையும் பொலிஸ்நிலையத்தில் அன்னை. மகனிற்காக கோயில்களில் தெய்வங்களின் அனுக் கிரகத்தை வேண்டிய அம்மா அதேமகனிற்காக இரவு முழுக்க பொலிஸ்நிலை யத்தில் தடுத்து வைக்கப்பட்டார். மகனிற்காக தாயை வருத்தியது அதிகாரம் அசைந்து கொடுக்கவில்லை பார்வதிஅம்மா. ஏனெனில் அவருக்கத்தானே தெரியும். பிரபாகரன் தனது மகனல்ல. அவன் தமிழ்த்தாயினுடைய மகனென்று. தன்னைப் பிடித்து அடைத்துவைத்தால் அம்மா என அவன் வருவானா? அலட்சியமாகவே அன்றைய இரவைக் கழித்தார். அடுத்தநாள் பருத்தித்துறை நீதிமன்றத்தில் பயங்கர வாத தடைச்சட்டமும் புலித்தடைச்சட்டமும் அன்னைக்கு முன்னால் அகங்காரம் கொண்டன. இராசாயனப்பகுப்பாய்வுக்கு வெடிமருந்து செல்ல அம்மா வீடுவந்தார். ஓரிருவாரங்களில் ஆபத்தற்ற இராசாயனப் பொருள் என பயங்கரவாதச் தடைச் சட்டம் வாலைச்சுருட்டிக் கொண்டது. இதன்பின் வீட்டிற்கு உறவினர் கூட வருவ தில்லை. எனெனில் எந்தக்கணத்திலும் ஆயுதப்படைகள் வரலாம். ஆனால் தனித்திருந்தாலும் பார்வதியம்மா மட்டும் பயப்படுவதில்லை.

எப்படி எப்படியோ நாட்கள் நகர்ந்தன. 1983 ஆடிக்கலவரத்தின் பின்னர்;ஒருநாள் வீட்டிற்கு வந்த இராணுவத்தினர்; வீட்டை தீயிட்டுக்கொழுத்தினர்;. எல்லாம் எரிந்து போயின. எரியுண்ட பொருட்களிடையே எரியாத ஒரேஒரு பொருள் ‘யாமிருக்கப் பயமேன்’ அபயம் அளிக்கும் முருகனின் திருவுருவம். கட்டம் போட்ட கண்ணாடிப் படம் மகனை நினைத்தார். இருவரும் ஒருவரா? இருப்பதற்கு ஏதுவான இடமின்றி பலஇடம் அலைந்தாலும் இறுதியில் அபயம் அளிக்கும் முருகனின் கந்தவன மடத்திலே வாழ்கை. நாடுமீட்கப் புறப்பட்ட மகனால் இருந்த வீட்டையும் இழந்து அலைந்த பெற்றோர்கள் ஏதேச்சை யாக நடந்ததா? அல்லது இறைவன்கட்டளையா? இவர்கள் இருந்த மடத்திற்கு சிலநூறுயார் தூரத்தில் மகனின் மறைவிடம் அறியாத பெற்றோர் அறிந்தபோது மகன் அலட்டிக்கொள்ளா மல்கூறினார். ‘அவர்கள்மடத்திலே. நான்றோட்டிலே. நீங்கள் உங்கள் வேலையைச் செய்யுங்கள்’ நண்பர்கள் திகைத்தார்கள். பாரதத்தில் கண்ணன் சொன்ன பகவத்கீதை ‘எதிரேபார் உறவினர்களா? கவலைப்படாதே! வில்லைஎடு அம்பைத்தொடு’ இங்கே அண்ணன் சொன்னதை நண்பன் சொன்னபோது என்வார்த்தைகளிற்கு சக்தியில்லை இதற்கு ஏற்றவொரு வசனத்தை என்னால் அமைக்கமுடியாது.

1983இன் இறுதியில் ஈழத்தில் வாழமுடியாது தமிழ் நாட்டிற்குப் பயணம் பத்திரிகைகளில் படமாய்வரும் மகனைப்பார்த்து தினமும் பரவசம். திருச்சியில் நடந்த கண்காட்சியொன்றில் எத்தனைவிதமாய் எத்தனைபெரிதாய் மகனின்படங்கள். அத்தனையும் கலர்கலராய் அப்பப்பா! பன்னிரண்டு வருடங்களின் முன்னால் வீட்டில இருந்த மகனின் ஒவ்வொருபடத்தையும் மகனே அழித்ததை நினைத்துப் பார்த்தார். ஆச்சரியம் அளவுகடந்தது. ‘தம்பி’ என அழைத்த வர்கள் போய் இப்பொழுது ‘தலைவர்’ என அழைக்கின்றார்கள் நெஞ்சுநிறைந்தது. ஆனாலும் நேரேபார்க்க தாய்மனம் தவித்தது.
1986 செப்டெம்பர் மாதம் தம்பி வேலுப்பிள்ளையின் மகளின் திருமணத்தில் அப்படியொரு எதிர்பாராத இனியசந்திப்பு! மகன் வருவானா? என்றெரு எதிர்பார்ப்பு. அப்படியே கொஞ்சி விளையாடும் பேரன் சார்ள்ஸைக் கொண்டுவந்தாள் முன்னே வந்த மருமகள்மதி கணவன் வேலுப்பிள்ளையை கேட்காம லேயே அள்ளிஎடுத்தார் பார்வதிஅம்மா. யாருக்கும் கோபமில்லை. தந்தையுடன் கதைத்தபின் தாயுடன் மைந்தன் அளவளாவினான் அன்புசொரிந்தான். அவனே இப்போது தந்தையாகி விட்டான் அல்லவா! பதின்மூன்று வருடங்களுக்கு பின்னர் பிரிந்தவர் கூடினால் பேசவும்வேண்டுமா? கொண்டாட்டம் குதூகலம் அன்பான அரவணைப்பான பேச்சு க்கள் ஏக்கங்கள் எதிர்பார்ப்புக்கள் எல்லாம் தீர்ந்த நிம்மதியானநாட்கள்.
1987ம்ஆண்டு ஆரம்பநாட்கள் ‘தை பிறந்தால் வழிபிறக்கும்’ தனயனின் நம்பிக்கை வீண்போகவில்லை. தமிழகத்தில் இருந்த தமிழீழத்திற்கு களம்காண சென்றுவிட்டார். என்னவோ ஏதோ தாய்மனது தவித்தது. அதுபோலவே ‘வடமராட் சியில் சிங்களஇராணுவத்தின் விடுதலைச்சிகிச்சை’ டாக்டர் டென்சில் கொப்பேகடுவா மயிரிழையில் தப்பினார் மகன் என்ற செய்தி மகனைப்பார்க்க மனசுதுடித்தது. எப்படி முடியம? இந்திய அரசின் விருப்பமென்று கூறி டில்லிக்கல்லவா தந்திரமாக அழைத்துச்சென்றனர். அசோகாவிடுதியில் நாலைந்துநாட்கள் அடைக்கப்பட்டார் மகனென்ற சேதி கசிந்தது. மனதுவலித்தது. இங்கேயும் பிரச்சனை ஆரம்பமானதா ? ஒப்பந்தம் ஒன்று இலங்கையில் நடந்ததும் இரண்டுநாட்களின் பின் அவசர அவசரமாக சென்னைக்குத்திரும்பிய மகனை சிலநிமிட நேரங்கள் வாஞ்சையுடன் பார்த்தார். வேகம்விரைந்தது பேச முடியவில்லை. டெல்லியின்பிரச்சனை யாழ்ப்பாணத்தில் மீண்டும் போர்தொடங்கியது. சிஙகளஇராணுவத்திற்கு பதிலாக இந்திய இராணு வத்தினர் ஜேயார் சிரித்துக்கொண்டிருந்தார். மகனைப்பற்றிய செய்திகள் தொடர்ந்தன. இறுதியில் மணலாற்றுக்காட்டில் நித்திகைக்குளத்தில் முற்றுகையாம். கலங்கவில்லை அன்னையிவள். மகனோ முன்வைத்தகாலைப் பின்வைக்கவில்லை. 1990ம் ஆண்டு இந்தியஇராணுவம் திரும்பிஓடியது. அது வந்தபோது இருந்ததைவிட சென்றபோதே எல்லைகள்விரிந்தன. ஈழத்தில் மகனின் நேரடிஆட்சி திருச்சி யில் அன்னையின் சிக்கனவாழ்க்கை. எப்பொழுதும் மகனைப்பற்றியே சிந்தனை.

தனயனைக் கண்டு புன்னகை கொண்டாள்.

காலங்கள் நகர்ந்தன. 2000ம் ஆண்டு பார்வதிஅம்மாவின் கால்கள் மட்டும் நகரமறுத்தன ஆரம்ப பாரிசவாதமென மருத்துவர்; கையைவிரித்துவிட்டார். மகனின் தந்தையே தாய்க்குத் தாயும்தந்தையுமானார். வேலுப்பிள்ளைஅப்பாவின் மனைவி வேலுப்பிள்ளைஅப்பாவிற்க்கு பிள்ளையுமானார்;. அன்பான அவரின் பாராமரிப்பில் தாய் தமிழ்நாட்டின் முசிறி யில் அகமகிழ்ந்திருக்க மைந்தனோ! ஓயாதஅலையாய் ஈழத்தில் களமாடினான். வெற்றிகள் குவிந்திட ஆனையிறவும் அடிபட யாழ்பாணத்திற்குள் மீண்டும் புலிகள் புகுந்தனர். அகிலஉலகமும் விழித்துக் கொண்டது. கூடிப்பேசி கொள்கை வகுத்தன. முதுகில்குத்தவே முக்காடுபோட்டன. கொழும்பிற்கு இணையாக கிளிநெச்சிக்கும்; உலகஇராஜதந்திரிகள் என சொல்லிக்கொண்டு ஓடித்திரிந்தனர். போர்; நடந்த பூமிக்கு ஓய்வுநாள் வந்தது. ‘ஓயாத அலைகள்’ ஓய்ந்துகொண்டது.
2003ம் ஆண்டு மே மாதம் இறுதிவாரம் எப்படியோ அன்னை தாயகம் வந்தாள். தனயனைக்கண்டு புன்னகை கொண்டாள். முப்பதுவருட அன்னையின் தவம் முழுமைபெற்றது. தடை களும் தகர்ந்தன. மகன்பிரபாகரன் பார்வையில் பார்வதி அம்மா வாழ்ந்தார். மகனின் பாசத்தின்முன்னால் பாரிசவாதம் தன்வலி இழந்தது. அன்னையின்நோயை எங்கள் மன்னவன் தீர்த்தான். முன்னைநாள் தான் கொண்ட ஆயுதக்காதல் அன்னைக்கு பிடிக்குமா தந்தைக்குப்பிடிக்குமா? தாய்தந்தையின் முன்னால் வெறும்கையுடனே மகன் போவான். மகனிடம் தாயைச் சேர்த்ததால் தந்தையும் மகிழ்ந்தார். ஆறுவருடங்கள் எப்படிப்போனதோ?
சர்வதேசத்தின் சூழ்சிவலையில் சின்னஞ்சிறு தமிழர்தேசம் சிக்கிக்கொண்டது. வன்னியின் வான்பரப்பில் வல்லூறுகளின் வட்டம் ஓடிஒதுங்க இடம் இன்றி ஓடும் மக்கள். யாருக்கு யார்;தான் காவல். பிணங்களின் மேலே இன்னெருபிணமாய் யார்; யாரோ சரிந்தனர்? மக்களைப்பிரியா மன்னவனும் மன்னனைப் பிரியா அன்னை யிவளும் சொற்களால் இங்கே சொல்லமுடியாது. அத்தனை கனமாய் சொல்லேது. அன்னை யும் தந்தையும் மைந்தனைப் பிரிந்தனர்;.
2009 ஆண்டு வைகாசிமாதம் 16ம் நாளில் வட்டுவாகல் பாலத்தை கடந்தனர்; பெற்றோர். மெனிக்பாம் முகாமில் ‘பிரபாகரனின் தந்தை நான்தான்’ கணவன் வேலுப்பிள்ளையின் வெண்கலக்குரலின் பின்னால் பார்வதிஅம்மா மெதுவாகத்தான் சென்னார். ‘நான்தான் அன்னை’ பரபரத்த இராணுவம் அன்னை யையும் அப்பா வையும் பனாகொடைக்கு கொண்டுபோனது! ஏழுமாதங்கள் எப்படிப்போனதோ? காராக்கிருகத்தில் கண் தெரியா இருளில் கட்டியநாள்முதல் கண்ணான கணவனுடன் கைபிடித்த இவரும். யாருக்கும் தெரியாது? எங்கேஇவர்கள்? உலகம் முழுக்ககேள்வி பிறந்தது விடையாய் வந்தது. அந்தச் செய்தி பனாகெடை முகாமில் காலனின் அழைப்பில் வேலுப்பிள்ளைஅப்பா! அப்படியானால் பார்வதிஅம்மா எங்கே? செத்தும்கொடுத்த ‘சீதக்காதி’ வேலுப்பிள்ளைஅப்பா! பார்வதிஅம்மாவுடன் வெளியேவந்ததும் மீண்டும் வல்வெட்டித்துறையில்……

……பிறந்தமண்ணில் இந்திராணி வைத்தியசாலையில் பார்வதிஅம்மா….. சிறுநடை நடந்தமண்ணில் இன்று சிந்தனைமறக்கும் பார்வதிஅம்மா உங்களை எழுத என்னால் முடியாது.

நன்றியுடன்
அன்புள்ள அம்மாவின் நினைவில்
வருணகுலத்தான்(10மாசி2011)