வழி விடு.! இது தமிழர் யுகம்…!

வழி விடு.! இது தமிழர் யுகம்…!

நம்பிக்கை நாற்றுக்களை!

நம் தமிழர் வரலாற்றை

நாலுவரி கவியாய் தருவேன் கேளீர்!

ஐந்நுாறு ஆண்டுகளாக

நய வஞ்சகர்களுக்கு அடிமையாய் இருந்ததால்;

நலம் கெட்டோம்! நம்பிக்கை இழந்தோம்!

குறை கூறுவதே நம் குல நோயானது!

முதலில் மற்றவனைக் குறை கூறினோம்!

‘பின் அடுத்தவனைக் குறை கூறினோம்!

கடைசியில்;

தமிழ்ச்சாதி திருந்தாதென

நம்மையே நாம் குறை கூறினோம்

விளைவு;

நாடிழந்தோம்! வீடிழந்தோம்!

அகதியாய் அவனியில் அலைந்தோம்!

கொலு கொலுத்த இனத்தை

கூட்டியள்ளி நம்பிக்கை தந்தான் எம் தம்பி!

தவளைப் பாய்ச்சலால்

பூநகரியில் நட்டனர் நம்பிக்கை நாற்றுக்கள்!

முல்லைத் தீவினை மீட்டபோது

அது முளைவிடக் கண்டோம்!

கிளிநொச்சி அடியில் அது கிளைவிடக் கண்டோம்!

ஓயாத அலைகளால் ஓடியோடி நீர்பாய்ச்சி

ஆனையிறவு பளையோடு அது தோப்பாகக் கண்டோம்

நாவற்குழி, நாகர்கோவில்

பகை முடிக்கும் பலாலியென தொடரட்டும் நாற்றுக்கள்!

போத்துக்கேயனை இலங்கையில் கால்பதிக்க வைத்தவனே

ஒல்லாந்தனே ஓடிப்போய் அழைத்து வந்தவனே !

ஆங்கிலேயனிடம் ஆட்சியை ஒப்படைத்தவனே!

இந்தியனையும் இலங்கைத்தீவில் இறங்க வைத்தவனே

இனி யாரைக் கூட்டிவரப்போகின்றாய்?

இருபது நூற்றாண்டுகளாக இந்த தீவிற்குள் நீ கூட்டி வந்து

உன்னோடு நாமும் அடிமையானது போதும்!

வழி விடு! இது தமிழர் யுகம்!

எங்கள் தம்பியும் அவன் வழியுமே

எங்கள் நம்பிக்கை நாற்றுக்கள்!

வெற்றி வேற்று நாட்டான் தருவதல்ல; விளங்கிக் கொள்!

உன் விடிவும் எம்மிடந்தான் எழுதிக்கொள்!

இவை வெற்று வரிகளல்ல தமிழினத்தின் நம்பிக்கை ஊற்றுகள்.