விடுதலைக்கான அடையாளம்

பனங்கூடல்கள், தரவைகள், தோட்டவெளிகள், ஊர்மனைகள், ஒழுங்கைகள், கோவில்கள், குளங்கள், வயல்வெளிகள், கடற்கரை இப்படித்தான் அநேகமாக எங்கள் ஊர்களும் நகரங்களும் இருக்கின்றன. இவற்றோடு சில இடங்களில் அன்னியர்கள் அல்லது ஐரோப்பியர்கள் கட்டிய கோட்டைகள் இருக்கின்றன. நகரங்களில் குருட்டு மணிக்கோபுரங்கள் இருக்கும் இவைதான் பொதுவாக எங்கள் ஊர்களினதும் நகரங்களினதும் பொது அடையாளங்களாக இருக்கின்றன.

அமெரிக்காவை அடையாளப்படுத்துவதற்கு அமெரிக்காவின் சுதந்திர சிலையும் வெள்ளை மாளிகையும் இரட்டைக் கோபுரமும் இருக்கின்றன. பிரான்சுக்கு ஈபிள் கோபுரமும், இத்தாலிக்கு ரோமபுரி நகரின் மாடங்கள், சீனாவுக்கு பெருஞ்சுவர், இந்தியாவிற்குத் தாஜ்மஹாலும் இந்தியா கேட் என்ற பெரிய கட்டியமும் இருக்கன்றன. இப்படி ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொன்றோ பலவோ சிறப்பு அடையாளங்கள் உள்ளன. ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு பிரதேசத்திற்கும் கூட இப்படிச் சிறப்படையாளங்கள் இருக்கின்றன. இந்த அடையாளங்கள் சிலது இயற்கையாக அமைந்து விடுகின்றன. சிலவேளை மனிதர்களின் வியக்கத்தக்க சாதனைகளாலும், கடுமையான உழைப்பாலும் உருவாகிவிடுகின்றன.

யாழ்ப்பாணம் என்றால் யாருக்கும் உடனே பனைமரங்களும் யாழ்ப்பாண நூலகமும் நல்லூர் முருகன் கோவிலும் குருட்டு மணிக்கூட்டுக் கோபுரமும் தான் ஞாபகத்திற்கு வரும். இன்னும் கொஞ்சம் கண்ணை மூடி யோசித்தால் செம்பாட்டு மன்தொட்டங்களில் மரவள்ளியும் வெங்காயமும் புகையிலையும் மிளகாய்ச் செடியும் நிற்பது நினைவுக்குவரும். தோட்ட வெளிகளில் நிலமட்டத்திற்கு இருக்கும் கிணறுகள் கடற்கரையோரங்களில் இப்போது கவிழ்க்கப்பட்ட படகுகளும் கோடிப் புறத்தில் தொங்கும் வலைகளும் முட்கம்பி வேலிகளும் காவலரண்களும் தான் காட்சியாகியுள்ளது. ஒழுங்கைகளும் சிறுதெருக்களும் நிரம்பிய ஊர்களில் அங்கங்கே உயரமாக இருப்பவை பணிகளும் கோவில் கோபுரங்களும் தான். இதைவிட்டு இன்னும் யோசித்தால் வல்வைவெளி, முள்ளிவெளி, கப்பூதுவெளி, உயனை வெளி, கல்லுண்டாய் வெளி, கைதடி வெளி, நாவற்குழி வெளி, செம்மணி வெளி, மண்டைதீவு வெளி, வேலணை வெளி, வளலாய் வெளி, மாவிலங்கை வெளி என்ற தரவைகள் நினைவில் எழும். இன்னும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் என்றால் நாற்சார் வீடுகளும் கேணிகளும் ஆவுரஞ்சிக் கற்களும் துலாக் கிணறுகளும் பெரிய சங்கடப் படலைகளும் நினைவில் வரலாம். சங்கிலியன் தோப்பு, கந்தரோடைச் சின்னங்கள், புத்தூர் மழவராயனின் மேடம் அல்லது சத்திரம் போன்றவை ஞாபகத்திற்கு வரும் அதையும் கடந்து இன்னும் யோசித்தால் நீர்வேலிப் பக்கத்து வாழைத்தோட்டங்க்களும் அளவெட்டி தொடக்கம் பலாலி வரையுமான மரவள்ளித் தோட்டங்களும் நிலாவரைக் கிணறும் தோன்றும். வேம்பிராய், கோப்பாய், கைதடி, ஆவரங்கால், புத்தூர் பக்கத்தில் கற்குவாறிகள் இருப்பது நினைவில் வரும். நெடுந்தீவென்றால் குதிரைகளும் கோவேறுக் கழுதைகளும் கல்வெளிகளும் இருக்கும். அந்தப் பெரிய தரவை வெளிகளில் குதிரைகள் நிற்கும் காட்சியை யாராலும் எப்போதும் மறக்கமுடியாது. இதைப்போல இயக்கச்சி, பளை பச்சிலைப் பள்ளிப் பகுதியில் பனங்கூடல்களும் தென்னந்தோப்புகளும் கலந்திருக்கின்றன. தென்னையும் பனையும் இங்கு கலந்திருப்பது போல வேறெங்கும் காண்பது அரிது.

இப்படித்தான் பொதுவாக எங்கள் ஊர்களின் அடையாளங்களும் நகரங்களின் முகமும் இருந்தன. இன்றும் அடையாளங்கள் இருக்கலாம். ஆனால் அவை பொது அடையாளங்கள். ஆனால் இந்த அடையாளங்களுடன் கடந்த 20 ஆண்டுகளில் எங்கள் தாயகத்தில் வேறு புதிய அடையாளங்கள் வந்து விட்டன. மாவீரர் நினைவு தூபிகள், அவர்களுடைய நினைவு மண்டபங்கள், சிலைகள், எனப் புதிய அடையாளங்கள் ஒவ்வொரு பிரதேசத்திலும் வந்துவிட்டன. வல்வெட்டித்துறையில் தீருவிலில் குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 12 விடுதலைப்புலி மாவீரர்களின் நினைவுத்தூபி கண்ணுக்குள் நிறைந்திருக்கின்றது. இதேபோல போராளிகளின் போராட்ட உறுதிப்பாட்டைச் சித்தரிக்கும் சிலை ஒன்றும் அங்கே இருந்தது. படையினர் அதை உடைத்து விட்டார்கள். இதைப் போல நல்லூருக்கு வரும் போது திலீபனின் நினைவு தூபியை பார்க்காமல் யாரும் போக முடியுமா, அல்லது திலீபன் உன்னாவிரதமிருந்து உயிர் நீத்த அந்த இடத்தை நல்லூர் வீதியை மறக்கத்தான் முடியுமா, கொடிகாமத்தில் ஆனையிறவுப் போர்க்களத்தில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவாகக் கட்டப்பட்ட அந்த அழகிய பெரிய நினைவு மட்டபம் இருந்தது. ஆனால் படையினர் அதனையும் இடித்தழித்து விட்டார்கள். நெல்லியடியில் கரும்புலி மில்லரின் சிலையும் இடித்தழிந்த நெல்லியடி மகாவித்தியாலயமும் புதிய அடையாளங்களாகிவிட்டன. முத்திரைச் சந்தியில் கேணல் கிட்டு நினைவுப் பூங்கா. பருத்தித்துறையில் சித்தப்பா பூங்கா. இப்படி ஏராளம் புதிய அடையாளங்கள். இதெல்லாத்தையும் விடவும் பெரிய புதிய அடையாளங்களாக எங்கள் மண்ணில் மாவீரர் துயிலும் இல்லங்கள் இன்று கண்ணில் தோன்றுகின்றன. நினைவில் பெரும் சுவடுகளாக விரிந்து நிற்கின்றன. இந்தத் துயிலுமில்லங்கள் யாழ்ப்பாணத்திற்கு மட்டுமல்ல. தமிழீழ தேசமெங்கும் புதிய அடையாளமாக இவை இன்று ஆகிவிட்டன. இவைதான் விடுதலைக்கான அடையாளங்களாகவும் ஆகியுள்ளன.

ஆக்கம்:- மக்ஸ்வெல் மனோகரன்.
எரிமலை 2008 இதழிலிருந்து.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”