விடுதலைக்கான திசையில் உயர்ந்த கரங்கள்…….

ஒன்றுபட்ட கருத்துக்குவியும் ஒரே நேரத்தில் அனைவரும் ஒன்று திரள்வதும் மிகப்பெரிய வலுவையும் செயற்பாட்டில் அதிக விளைவையும் தரும். இன்று தமிழீழத்தில் இத்தகைய ஒரு எழுச்சியும் அணி திரள்தலும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. மக்கள் அனைவரும் அடக்கு முறைக்கு எதிராக கிளர்ந்து எழுந்துள்ளார்கள். ஆக்கிரமிப்பிலிருந்து எமது தேசத்தை மீட்டெடுத்து விடுதலையை வென்றெடுக்க ஒவ்வொருவரும் ஆயுதப்பயிற்சி எடுக்கத் தொடங்கியுள்ளார்கள். இது ஒரு புரட்சிகரமான விழிப்பு நிலையே. இந்த விழிப்பு சாதாரணமானதல்ல. நான்கு நூற்றாண்டுகளாக தூங்கிக் கிடந்த ஈழத்தமிழினம் புத்துணர்ச்சியோடும் புதிய வேகத்தோடும் போராடத்துநிந்துள்ளது. சுதந்திரமான வாழ்வுக்கான தேடலில் தன்னை முழுமையாக அது ஈடுபடுத்தியுள்ளது. இது நமது வரலாற்றில் மிக முக்கியமனா ஒரு நிகழ்வு. நமது மனவுலகில் ஏற்பட்டுள்ள ஒரு புரட்சிகரத் திருப்பம்; எதிரியின் ஒடுக்குமுறை எமக்கு ஏற்படுத்திய மிகச் சிறந்த விளைவு. நமது சுதந்திர வாழ்விகான புதிய தொடக்கம் இது.

சிங்களப் பேரினவாதத்தின் மிக மோசமான ஒடுக்குமுறை எமது போராட்டத்தின் வேகத்தையும் வலுவையும் அதிகரித்தது போலவே, இன்று மக்களின் தற்காப்பு – யுத்தத்துக்கான அணிதிரள்தலையும் அது நிர்ப்பந்தித்துள்ளது. வரலாறு எத்தனையோ தடவை பாடங்களைக் கற்றுத்தருகின்றபோதும் ஒடுக்குமுறையாளர்களும் ஆக்கிரமிப்பாளர்களும் எதையும் ஏற்றுக்கொள்வதில்லை. மாறாக மேலும் மேலும் தமது ஒடுக்குமுறையையும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையுமே இன்னும் அழுத்தத்துடன் மக்களின் மேல் கீழ்த்தரமான முறையில் பிரயோகிப்பார்கள். அமுக்க அமுக்க வெடிப்பு நிகழ்வது போல, அவ்வப்போது இந்த அழுத்தங்களை உடைத்து மக்கள் எழுச்சிகொல்வார்கள். இது உலகம் முழுவதும், வரலாறு முழுவதும் நிகழ்ந்துவரும் ஒரு பேருண்மை. இதுவே இங்கும் – எமது தேசத்திலும் இப்போதும் நிகழ்ந்திருக்கின்றது.

நமது தேசம் முழுவதுமிருந்த விடுதலை உணர்வாளர்கள் ஒன்று திரண்டுள்ளார்கள். எதிரியின் ஆக்கிரமிப்புப் பிடியில் சிக்கிக்கொள்ளாமல், அவனது சூழ்ச்சிகளிலும் தந்திரோபாயங்களிலும் வீழ்ந்துவிடாமல் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களிலிருந்து வெளியேறி வன்னியில் அவர்கள் மையங்கொண்டுள்ளார்கள்.

சுதந்திர தாகம் கொண்டோரின் மன உணர்வு எப்போதும் இப்படித்தான் தொழிற்படும். விடுத்லைக்காகப் போராடும் சக்தியுடன் அது சேர்ந்துகொள்ளும். இத்தகைய ஒரு சேருதல் தான் இங்கேயும் நிகழ்ந்திருக்கிறது. போராடும் களத்தில், போராடிக்கொண்டிருக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் மக்கள் ஒன்றிணைந்து முழமையாக அணிதிரண்டுள்ளமையே இது.

எதிரி எந்த எழுச்சியை அடக்கி விடுவதற்காக இன்னும் மக்களின் மீது தனது ஒடுக்குமுறையை அதிகமாகப் பிரயோகிக்க முனைவான். ஆனால், ஒன்றுபட்டெழுந்த மக்களிடம் மூண்டுள்ள விடுதலைத் தீயின் முன்னாள் அவையெல்லாம் பொசுங்கிப்போய்விடும். எமது மக்கள் மீண்டும் இந்த வரலாற்று உண்மையை மெய்ப் பிக்கப் போகிறார்கள். நமது விடுதலைக்கான திசையில் உயர்ந்துவிட்டன கரங்கள். அவை வரலாற்றைப் படைக்கும்.

தமிழீழத்தில் 1999 அன்று மக்களின் எழுச்சியில் இருந்து தேசக்காற்று.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”