விடுதலைப்புலிகளையும் நினைவுகூர அவர்களின் பெற்றோருக்கு உரிமையுண்டு – யஸ்மின் சூக்கா!
மே மாதம் 18 ஆம் நாள் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களின் பெயர்களை நினைவுக் கற்களில் பொறித்து அஞ்சலி செய்வதற்கு சிறிலங்கா காவல்துறையினர் தடை விதித்ததுடன், ஏற்பாட்டாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்திருந்தது. காவல்துறையின் இச்செயற்பாட்டை உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் தலைவர் யஸ்மின் வன்மையாகக் கண்டித்ததுள்ளார்.
கடந்த புதன்கிழமை முல்லைத்தீவு நீதிமன்றமும் நினைவுக் கற்களில் விடுதலைப் புலிகளின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்து தடை விதித்திருந்தது.
இது தொடர்பாக யஸ்மின் சூக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில், எந்தவொரு தாய், தந்தையருக்கும் தமது பிள்ளைகளை நினைவுகூர உரிமையுண்டு. அதனை நீங்கள் தடுக்கமுடியாது. அதேபோல் யுத்தத்தில் கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளையும் நினைவுகூரமுடியும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றையதினம் முல்லைத்தீவு பங்குத்தந்தை எழில் ராஜேந்திரன் இரண்டாவது தடவையாக வவுனியா காவல்நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணை செaய்யப்பட்டார். குறித்த பங்குத் தந்தைக்கு சிங்களம் தெரியாது. அவர் விசாரணை செய்யப்பட்ட பின்னர் கையெழுத்திடுமாறு காவல்துறை இன்ஸ்பெக்டரால் பணிக்கப்பட்டார்.
இந்நிலையில் காவல்துறையினரால் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் பங்குத்தந்தை எழில் ராஜேந்திரனின் பெற்றோரும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டனர். இச்சம்பவமானது சிறிலங்கா காவல்துறையினரால் அனைத்துத் தமிழ் மக்களுக்கும் விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகவே காணப்படுகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.