8

ஜொனி மிதி வெடிகள் பெயரிடலும் வரலாறும்.!

1987 ஐப்பசி 10. இந்தியப் படையுடன் போர் தொடங்கிவிட்டது. அடுத்தநாள் – கொக்குவில் பிரம்படி வீதியில் இருந்த தலைவரின் பாசறையை இலக்கு வைத்து, இந்தியப் படையின் சிறப்புக் கொமாண்டோக்கள் தாக்குதலைத் தொடுத்தனர். அவர்களின் முயற்சி வெற்றிபெறவில்லை. ஆனாலும் தலைவர் தனது பாசறையை இடம் மாற்றிக்கொண்டார். ‘ஒப்பறேசன் பவான்’ என்ற பெயரில் புகழ் பெற்ற யாழ்ப்பாணச் சமரை இந்தியப் படைகள் தொடர்ந்தன. “ஓரிரு நாட்களுக்குள் எல்லாம் முடிந்து விடும்” என்றார்கள் இந்தியத் தலைவர்கள். ஆனால் ‘யாழ்ப்பாணச் சமர்’ ஒரு மாதம் நீடித்தது. போரைத் தொடர்ந்து வழிநடாத்துவதற்காக தலைவர் தளத்தை மாற்றிக்கொண்டார். சில வாரங்கள் கழித்து இந்திய தளபதிகளும் இதை அறிந்து கொண்டு விட்டனர். ஆனால் யாழ்ப்பாணத்தை விட்டு தலைவர் எங்கு சென்றிருப்பார் என்பது, இந்திய தளபதிகளுக்கு புதிராகவே இருந்தது.

அல்லது மன்னார் பெருங்காட்டிற்குச் சென்று விட்டாரா? அல்லது கொக்கிளாய் ஆற்றைக் கடந்து திருகோணமலைக்குச் சென்று விட்டாரா? வரைபடத்தை விரித் துவைத்துவிட்டு இந்தியத் தளபதிகள் குழம்பத் தொடங்கினர். தலைவரின் இருப்பிடத்தைக் கண்டறிந்து சொல்வதில் சிங்களப் புலனாய்வுத் துறையும் பெருமுயற்சி செய்தது. ஆனாலும், தலைவரின் இருப்பிடம் தொடர்பான ஊகங்களைத் தவிர, சான்றுகளைப் பெறமுடியவில்லை. தலைவரைத் தேடி இந்தியப் படைகள் வன்னிப் பெருநிலத்திலும், தென் தமிழீழத்திலும் மோப்பம் பிடித்துத் திரிந்தன. இதேவேளை தமிழ்நாட்டில் தங்கியிருந்த கிட்டண்ணை, இந்தியப் படையுடன் போர்நிறுத்தம் ஒன்றைக் கொண்டு வந்து பேச்சுவார்த்தை நடாத்த முயன்றபடி இருந்தார்.

இந்திய அரசின் சம்மதத்தைப் பெற்று லெப்.கேணல் ஜொனியை தலைவரிடம் அனுப்பி, அவரின் கருத்துக்களையும்-பணிப்புக்களையும் பெற கிட்டண்ணை முடிவெடுத்தார். கிட்டண்ணையின் வேண்டுகோளை இந்தியப் படை ஏற்றது. ஆனால் ஜொனி இரகசியமாக தமிழீழத்திற்குச் செல்வதை அது தடுத்தது. ஜொனி செல்ல விரும்பும் இடத்திற்கு தாங்களே கூட்டிச் சென்று பாதுகாப்பாக விட்டுவிடுவதாக இந்தியத் தளபதிகள் பாசாங்கு செய்தனர். ஜொனியின் பயணத்தைப் பயன்படுத்தி தலைவரின் இருப்பிடத்தை அறிந்துகொள்ள அவர்கள் திட்டமிட்டனர்.

இந்தியத் தளபதிகளின் நோக்கம் தெரியாத ஒன்றல்ல. ஆயினும் அவர்களது கட்டளையை ஏற்க வேண்டிய தேவையும் நிர்ப்பந்தமும் இருந்தன. இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தார்கள். இந்தியப் படை வவுனியா வரை ஜொனியைக் கூட்டிச்சென்று விட்டுவிடுவது என்றும், அதன்பின் ஜொனி தானாகவே தலைவரைத் தேடிச்சென்று சந்தித்து மீண்டும் வவுனியா இந்தியப்படை முகாமுக்கே திரும்பி வந்துவிடுவது என்றும், இணக்கம் காணப்பட்டது. இந்தியத் தளபதிகளும் இதற்கு இணங்கினர்.

download (66)

ஜொனியை வவுனியா கொண்டு சென்று இறக்கிவிடு முன்னரே, வன்னிப் பெருநிலத்தில் ஜொனியின் பயணத்தைக் கண்காணிக்க இந்தியத் தளபதிகள் ஏற்பாடுகளைச் செய்தனர். ஜொனி வவுனியா கொண்டுவந்து விடப்பட்டார். தேசவிரோதக் கும்பல்களினதும், அவர்களது உளவாளிகளினதும் மற்றும் பதுங்கியிருக்கும் இந்தியச்சிப்பாய்களினதும் கண்களில் படாது சுற்றிச் சுழன்று, தலைவரின் இருப்பிடத்திற்கு விரைந்தார். தலைவரைச் சந்தித்தார். கிட்டண்ணையிடம் சொல்லவேண்டிய விடயங்களை மனதில் பதித்தார். மீண்டும் வவுனியா நோக்கிப் பயணத்தை தொடங்கினார்.

பயணத்தின் ஒரு கட்டத்தில் புதுக்குடியிருப்புக்கு வந்து, அங்கிருந்து சைக்கிள்மூலம் விஸ்வமடுவரை செல்ல முயன்று கொண்டிருந்தார். தேவிபுரத்திற்கு அருகே உள்ள காட்டாறு ஒன்றிற்குள், ஜொனியின் பயணப் பாதையை அறிந்துகொள்ளப் பதுங்கிக்கிடந்த இந்தியச் சிப்பாய்களின் துப்பாக்கி வீச்செல்லைக்குள், ஜொனியின் சைக்கிள் சென்றுவிட்டது. ஜொனி மீண்டும் வவுனியா திரும்பும் வரை வன்னிப் பெருநிலப்பரப்பில் இராணுவ நடவடிக்கைகள் எதையுமே செய்யமாட்டோம் என்ற இந்தியத் தளபதிகளின் வாய்மொழி வாக்குறுதியையும் மீறி, ஜொனி சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஒரு கல்லில் இரண்டு மாங்காய்களை வீழ்த்தும் தந்திரோபாயத்தை இந்தியத் தளபதிகள் கடைப்பிடித்தனர்.

ஜொனியின் பயணத்தைப் பயன்படுத்தி தலைவரின் இருப்பிடத்தை சரியாகக் கண்டறிவது ஒன்று மற்றையது புலிகளின் தளபதியை தந்திரோபாயமாககக் கொன்று விடுவது. இரண்டையுமே இந்தியத் தளபதிகள் அடைந்து விட்டனர். வவுனியாவுக்கு மேற்குப் புறத்தில் இருக்கும் மன்னாரிலோ அல்லது கொக்கிளாய் வாவிக்கு அப்பாலுள்ள தென் தமிழீழத்திலோ தலைவர் இல்லை அவர் மணலாற்றுக் காட்டிற்குள்தான் பாசறை அமைத்து இருக்கின்றார் என்பதை ஜொனியை தடயமாக வைத்து அறிந்து கொள்ள, இந்தியத் தளபதிகளுக்கு வெகுநேரம் பிடிக்கவில்லை. ‘இராசா’ கண்டுபிடிக்கப்பட்டு விட்டார். ஆகவே இராசா இனி நகர முடியாது என்று நினைத்துக்கொண்டு, இந்தியப் படைகள் ‘செக்மேற்’ சொன்னார்கள். ஜொனி சுட்டுக்கொல்லப்பட்டதும் அடுத்து என்ன நடக்கவிருக்கின்றது என்பதை தலைவர் ஊகித்தறிந்துகொண்டுவிட்டார்.

8

இன்னும் சில வாரங்களில் இந்தியப் படைகள் மணலாறு மீது ஒரு பெரும் இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளுவார்கள் என்று தலைவர் எதிர்பார்த்தார். வெள்ளம் போல் காட்டுக்குள் நுழையப் போகும் இந்தியச் சிப்பாய்களுடன் மரபுவழிச் சமரை நடாத்துவது எளிதல்ல என்பதும், தலைவருக்குத் தெரியும். அதற்காக பின்வாங்கிச் செல்லவும் – அவர் விரும்பவில்லை. ஏனெனில் அது புலிகள் இயக்கத்தை இராணுவ ரீதியாக அழித்துவிடும் என்று, அவர் உறுதியாக நம்பினார். தமிழீழ தேசியத்திற்குக் கவசமாக இருக்கும் புலிகளின் இராணுவ பலம் சிதைக்கப்பட்டால், தமிழினம் அரசியல் ரீதியாக ஒடுக்கப்பட்டுவிடும் என்று தலைவர் அஞ்சினார்.

ஆகவே இந்தியப் படையுடனான போரை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லவேண்டிய வரலாற்றுக் கடமை தன்மீதே இருக்கின்றது என்பதை நன்குணர்ந்த தலைவர் அவர்கள், சாதிக்க அல்லது சாக முடிவெடுத்தார். மணலாற்றைத் தளமாக்கிய அடுத்த கணத்திலிருந்தே ஒரு பெரும் காட்டுச் சமருக்காக காட்டையும் – போராளிகளையும் ஏற்கனவே தலைவர் தயார்ப்படுத்தியிருந்தார். இப்போது, முல்லைத்தீவு மாவட்டத்திலும்-மணலாற்றுக் காட்டிற்குள்ளும் இருந்த சில நூறு புலிவீரர்களை, ஒரு பெரும் சண்டைக்குத் தயாராக்கினார். காட்டிற்குள் நுழையப் போகும் இந்தியப் படைகளின் சுதந்திரமான நகர்வைக் குழப்புவதன் மூலம் சில இராணுவ சாதனைகளைப் படைக்க முடியும் என்றும், இவ்விதம் பல இராணுவ சாதனைகளை நிகழ்த்துவதன் மூலம் இந்தியப் படையின் இராணுவ நடவடிக்கையை முறியடிக்க முடியும் என்றும், தலைவர் எண்ணினார். இந்த இராணுவ சாதனைகள் ஒரு உளவியல் போருடன் கலந்து செய்யப்படுமானால், அது இரட்டிப்புப் பலனைக் கொடுக்கும் என்றும் அவர் எதிர்பார்த்தார்.

ஒரு தரைப்படை வீரனை கனவிலும் அச்சுறுத்துவது மிதிவெடிகளும் பொறிவெடிகளும் கண்ணிகளும் தான். இப்படியான சந்தர்ப்பங்களில், தூக்கிய ஒருகாலைக் கீழே வைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒரு படைவீரன் செத்துப் பிழைக்கின்றான். இந்த மிதிவெடிகளை, எறும்புக்கூட்டம் போல வரவிருக்கும் இந்தியச் சிப்பாய்களுக்கு எதிராகப் பயன்படுத்தினால் நல்ல பலனைக் காணலாம்.

images (90)ஆனால் உயர் தொழில்நுட்பத்துடன் உற்பத்திசெய்யப்பட்டு இறக்குமதி செய்யப்படும் இத்தகைய மிதிவெடிகளுக்கு நாம் எங்கே போவது? தலைவரது கனவிலும் -நினைவிலும் இந்தக் கேள்வியே உதித்து விடைதேடப் போராடியது. ஒரு நாள் அதிகாலை நான்கு நான்கரை மணியிருக்கும் காட்டுப் பாசறையில் தனது படுக்கையில் இருந்தபடி சிந்தித்துக் கொண்டிருந்த தலைவர் அவர்கள் திடீரென எழுந்து, சில நூறுயார் தள்ளி இருந்த பாசறையில் தங்கியிருந்த இராணுவ தொழில்நுட்பப்பிரிவின் பொறுப்பாளர்களைத் தேடிச் சென்றார். தனது மனதில் தோன்றிய மிதிவெடித் தயாரிப்புப் பொறிமுறை பற்றி அவர்களுக்கு அப்போதே விளக்கிக்கூறினார்.

காட்டிலேயே கிடைக்கக்கூடிய மரத்தடி-ரின் பால்ப்பேணி, மற்றும் றபர்பான்ட்’ என்பவற்றைக் கொண்டு, சிறுபிள்ளைகள் விளையாடும் ‘கெற்றப்போலின்’ தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி மிதிவெடிகளைத் தயாரிக்க முடியும் என்று தலைவர் விளக்கி நம்பிக்கையூட்டிக்கொண்டிருந்தார். பரீட்சார்த்த முயற்சிகள் தொடங்கின. சிறுதொகையில் வெடிமருந்தும், ‘பென்டோச்’ பற்றரியும், டெற்றொனேற்றரும்’ தவிர மிகுதி அனைத்துப் பொருட்களும் உள்ளூர்ப் பொருட்கள். இறுதியில் முயற்சி வெற்றிகண்டது.

இப்போது இந்தியப் படைகள் மணலாற்றுக் காட்டைச் சூழ பல்லாயிரக் கணக்கில் விரைவாகக் குவிக்கப்பட்டனர். அதற்கு ஒப்பறேசன் செக்மேற் எனப் பெயரிட்டனர். மெதுவான வேகத்தில் மிதிவெடி தயாரிப்புத் தொடங்கியது. அந்த மிதிவெடிக்குத் தலைவர் பெயரிட்டார் ஜொனி மிதிவெடி. இந்தியப் படைகள் காட்டுச் சமரைத் தொடங்கிவிட்டன. ஜொனிக்கு நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டு காட்டுக்குள் நுழைந்த இந்தியப் படைக்கு, ‘ஜொனி மிதிவெடி’கள் நம்பிக்கைத் துரோகம் செய்யத் தொடங்கிவிட்டன.

ஜொனியின் பயணத்தை நயவஞ்சகமாகப் பயன்படுத்தி ‘பாதை’ கண்டுபிடித்த இந்தியப் படைகளுக்கு இப்போது, ஜொனி மிதிவெடிகள் பாதத்தைக் கழற்றிக் கொண்டிருந்தன. இந்தியப் படைகள் எண்ணியதைப் போல தலைவரை அழிக்க முடியவில்லை. செக்மேற் 1……2……3 என இராணுவ நடவடிக்கை தொடர்ந்தது. 100……200……300 என இந்தியப் படைகளின் கால்களும் கழற்றப்பட்டன. ‘செக்மேற்’ அவமானத்துடன் முடிந்தது. ஜொனி மிதிவெடிகள் புத்துயிர் பெற்று புதுவேகம் கண்டன. செக்மேற் முறியடிப்பின் முதுகெலும்பு ஜொனி மிதிவெடிகள். ஒரு பெரிய வரலாறு இம் மிதிவெடிக்குள்ளும் இப்பெயர் சூட்டலுக்குள்ளும் ஒளிந்து கிடக்கிறது!

விடுதலைப்புலிகள் இதழ் 1994 ம் ஆண்டு ஆவணி, புரட்டாதி

(www.eelamalar.com)