189086_159094804233416_945639288_n

தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் முதலாவது மாவீரர் நாள் உரை 1989

எனது அன்பிற்கும் மதிப்பிற்கு உரிய தமிழீழ மக்களே!

“எமது போராட்டத்தில் இன்று ஒரு முக்கியமான நாள். இது வரை காலமும் எமது புனித இலட்சியமான தமிழீழ இலட்சியத்துக்காக உயிர்த்தியாகம் செய்த 1307 போராளிகளை நினைவு கூரும் முகமாக இந்த மாவீரர் நாளை நாங்கள் ஆரம்பித்துள்ளோம்.
முதல் முறையாக இன்று இந்த மாவீரர் நாளை நாங்கள் ஆரம்பித்துள்ளோம். எத்தனையோ உலக நாடுகளில் அந்த நாடுகளின் விடுதலைக்காக போரிட்ட படை வீரர்களின் பாதுகாப்புக்காப் போரிட்ட படைவீரர்களின் நினைவாகவும் இப்படிப் பட்ட மாவீரர் நாட்களைக் கொண்டாடுவது வழக்கம். உங்களுக்குத் தெரியும் இதுவரை காலமும் எமது இயக்கத்தில் வீரச்சாவடைந்த ஒவ்வொரு போராளிக்குமாகத் தனிப்பட்ட நினைவு நாட்களைக் கொண்டாடுவது வழக்கம். ஆனால் இந்த வருடத்திலிருந்து வீரச்சாவடைந்த எல்லோரையும் மொத்தமாக வருடத்தில் ஒரு நாள் நினைவு கூர்ந்து அந்த நாளையே “மாவீரர் நாள்” ஆகப் பிரகடனப் படுத்தியுள்ளோம். அதற்கு இன்னுமொரு காரணமும் உண்டு. அதாவது எங்களது விடுதலைப் போராளிகளில் முதலாவதாக வீரச்சாவு அடைந்த “சங்கரின்” நினைவு தினமாக இன்று அந்த மாவீரர் நாளை நாங்கள் பிரகடனப்படுத்தியுள்ளோம்.

அத்தோடு வழமையாக எங்கள் மக்களில் ஒரு பழக்கம் உண்டு. உயர்ந்த பதவிகள் வசதியானவர்கள் இப்படிப்பட்டவர்களைத் தான் பெரிதாகப் பார்க்கும் பழக்கம் உண்டு. அது போல எமது விடுதலைப் போராட்டத்திலும் தலைவர்களை மட்டும் பிரித்து அவர்களது செய்கைகளை மட்டும் பெரிதாகப் பார்க்கக் கூடாது என்பதற்காகவும் எல்லாப் போராளிகளும் சமம் எனும் ஓர் நோக்கத்துடனும் இந்த நாளை நாம் கொண்டாட முடிவு செய்துள்ளோம்.அதாவது எமது போராளிகளை நினைவு கூரும் தினத்தை ஒரு நாளில் வைப்பதால் எல்லோரும் அன்று எமது இயக்கத்தில் இருந்து வீரச்சாவு அடைந்த தலைவர்களில் இருந்து சாதாரணமாகப் போராடி வீரச்சாவு அடைந்த உறுப்பினர் வரை எல்லோரையும் சமமாகத் தான் கருதுகிறோம் என்பதுடன் வீரச்சாவடைந்த எல்லாப் போராளிகளின் நினைவு நாட்களையும் ஒன்றாக இணைத்து மாவீரர் நாளாக இன்று கொண்டாடுகிறோம். இல்லாவிட்டால் காலப் போக்கில் குறிப்பிட்ட சில சில ஆட்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அந்த மரியாதைகள் குறிப்பிட சில ஆட்களுக்குப் போகாமல் தடுத்து எல்லோருமே சமமாக ஒரே நாளில் நினைவு கூறப்படவேண்டும் என்பதற்காகத் தான் இந்த மாவீரர் நாள் கொண்டாடுவதற்கு முடிவெடுத்தோம். ஓர் இனத்தைப் பொறுத்தவரை வீரர்களையும் அறிவாளிகளையும் பெண்களையும் மதிக்காத இனம் ஒர் காட்டுமிராண்டி இனமாக மாறி அழிந்துவிடும். எங்களுடைய இனத்தில் அறிவாளிகள் இருக்கிறார்கள். மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது எங்கள் இனத்தில் பெண்கள் புனிதமாக மதிக்கப்படுகிறார்கள். அதே வேளை வீரர்களுக்குத் தான் பஞ்சமாக இருந்தது. ஆனால் இன்று இந்த மாவீரர் நாளில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி விட்டோம். ஆம் எமது வீரர்களைக் கூட நாம் கௌரவிக்க ஆரம்பித்துள்ளோம்.

இதுவரை காலமும் எங்களுடைய இனத்தில் வீரர்கள் என்றால் யார் என்று கேட்கும் நிலை இருந்தது. ஆனால் இன்று நாம் எம் இனத்தின் வீரர்களை நினைவு கூரும் நாள் ஒன்றை உருவாக்கியுள்ளோம். எனவே இனி எமது இனம் நிச்சயமாக அழியாது. இன்று எமது இனம் உலகிலேயே தலை நிமிர்ந்து இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் எமது 1307 போராளிகளின் உயிர்த்தியாகம் தான். அவர்களுடைய வீரமான தமது உயிரையே மதியாது போராடிய உண்மையான தியாகம் தான் எங்களுக்கு இன்று உலக நாடுகளில் ஒரு மரியாதையை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த மாவீரர் நாளை நாங்கள் எங்களுடைய வாழ்நாளில் முக்கியமான விழாவாக இன்றிலிருந்து ஒவ்வொரு வருடமும் கொண்டாட ஆரம்பிக்க வேண்டும்.